கிளிநொச்சி – பளை – இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த வெடிப்பு சம்பவம் இயக்கச்சி பகுதியில் கடந்த 3ஆம் தேதி இடம்பெற்றிருந்தது.
வீடொன்றிற்குள்ளேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 45 வயதான நபரொருவர் காயமடைந்த நிலையில், அவர் அநுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை போலீஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக போலீசார் கூறுகின்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி உள்ளிட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறித்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து உள்நாட்டு தயாரிப்பிலான மூன்று வெடிகுண்டுகள், கரும்புலிகள் தினத்தை கொண்டாடும் வகையிலான போஸ்டர் ஒன்று, ஒரு தொகை வெடிப்பொருட்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருக்கலாம் என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
மேலும், மே மாதம் 18ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் சைபர் தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர்.
இலங்கையின் பிரதான இணையத்தளங்களை இலக்கு வைத்து இந்த சைபர் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டிருந்தன.
இவ்வாறான பின்னணியில், இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க முயற்சிக்கின்றார்களா என்ற கோணத்தில் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.