புலிகள் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்ட மனோ கனேசன்
01 Jul,2020
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் அன்று நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கம் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார்.
அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவின் “சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு நான் தயார். நீங்கள் தயாரா?” “தென்னிலங்கை பெரும்பான்மை கட்சிகளின் கட்சி அரசியல் சண்டைகளை கணக்கில் எடுக்க வேண்டாம்!” “யார் என்னை நாடி வந்தாலும் அடைக்கலம் தருவேன்!” ஆகிய செய்திகளை எடுத்துக்கொண்டு தூதுவனாக நான், எனது கட்சி தூது குழுவுடன், கொழும்பிலிருந்து அதிகாலையில் கிளம்பி காலையில் கிளிநொச்சி சென்றடைந்தேன்.
சமாதான செயலகத்தில், என்னை வரவேற்ற தமிழ்செல்வன் அங்கே இருக்கும் விருந்தினர் இல்லத்தில் எம்மை தங்கும்படி கேட்டுக்கொண்டார்.
தமிழ் செல்வனை அந்த சமாதான செயலகத்தில் இரண்டு முறை அதற்கு முன்னரே நான் சந்தித்திருந்த காரணத்தினாலே நானும், தமிழ் செல்வனும் நல்ல அரசியல் நண்பர்களாக மாறியிருந்தோம்.
சிறிது நேரத்திற்கு பிறகு அங்கே கிளிநொச்சியிலேயே இருந்த மற்றுமொரு விருந்தினர் இல்லத்திற்கு புலிகள் எம்மை அழைத்து சென்றார்கள். அங்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்தார்.
அன்றுதான் நானும், பிரபாகரனும் முதல் முதலாக சந்தித்துக்கொண்டோம். என்னை கண்டவுடன், சிரித்தபடி, கைலாகு கொடுத்து, தோளை தொட்டு வரவேற்றார். அமர்ந்து பேச தொடங்கினோம்.
அங்கே புலிகளின் தலைவருடன் தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், நடேசன், புலித்தேவன் போன்ற ஏனைய புலி பிரமுகர்களும் இருந்தார்கள்.
பிரபாவை அடுத்து, அங்கே என் பார்வையை கவர்ந்தவர், பொட்டு அம்மான். எனக்கு ஞாபகம் இருக்கும் வரையில், அவர் சிவந்த நிறத்தில்,உயரமாக, அடர்ந்த கறுத்த மீசையுடன் ஒரு மலையாள சினிமா நடிகர் மாதிரி தோற்றமளித்தார்.
சந்திரிகாவின் செய்தியை நான் பிரபாகரனிடம் கூறினேன்.
“நோர்வேயை நானே இலங்கைக்கு கூட்டி வந்தேன். எனவே தொடர்ந்து பேச தயார். பேச விரும்புகிறேன். கொழும்பு கட்சி அரசியலை கணக்கில் எடுக்க வேண்டாம். இதை பிரதானமாக உங்களிடம் சொல்ல சொன்னார்” என்றேன்.
“சந்திரிகா பேசுவதானால் பேசலாம். சண்டை இடுவதானாலும் சண்டை இடலாம்.” என சிரித்தபடி பிரபாகரன் பதில் சொன்னார்.
மேலும், “கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசியல் விளையாட்டுகள் பற்றி எனக்கு அக்கறை கிடையாது. ரணிலும், சந்திரிகாவும் எனக்கு ஒன்றுதான். இதை அவரிடம் சொல்லுங்கள்” என்று பிரபாகரன் என்னிடம் கூறினார்.
மேலும், “நோர்வேயை அவர் கூட்டி வந்து இருக்கலாம். ஆனால்,நாங்கள் பேச வேண்டுமே. இல்லாவிட்டால் நோர்வேக்கு வேலை கிடையாது”. என்று சொல்லி சிரித்தார்.
அச்சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலம் நிகழ்ந்தது. சந்திப்பின் போது பிரபாகரன் அதிகமாக வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தார். நகைச்சுவையாக பல விடயங்களை பேசினார்.
அதுவரை அவரைப்பற்றி, அவர் ஒரு கடினமான மனிதராக இருக்க கூடும் என நினைத்திருந்தேன். அன்று கடினத்துக்கு அப்பால், அவருக்கு நகைச்சுவை உணர்வும் நிறைய இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன்.
நானும் அதே மாதிரி நகைச்சுவை உணர்வாளன் என்ற காரணத்தினாலே இருவரும் பேச வந்த விடயத்தை விட்டுவிட்டு நிறைய வேறு விடயங்களை பற்றியும் பேசி சிரித்தோம்.
அங்கு இன்னொன்றையும் கவனித்தேன். பிரபாகரனின் இரு புறமும் அமர்ந்திருத்த ஏனைய புலி பிரமுகர்கள் தாமாக எதுவும் பேசவில்லை.
நானும், பிரபாகரனும் பேசி சிரிப்பதை கண்டு அவர்களும் சத்தமில்லாமல் சிரித்துக்கொண்டார்கள். அதற்கு மேல் பிரபாகரன் ஏதாவது அவர்களிடம் கேட்டால் மாத்திரம் பதில் கூறினார்கள்.
என் தந்தையின் சினிமா பற்றி இடையில் பேசினார். எனது தந்தையின் இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களை தான் விருப்பத்துடன் பார்த்திருப்பதாகவும், நமது நாட்டு தமிழர்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் தமிழ் சினிமாவை கட்டியெழுப்ப பாடுபட்டவர் என்ற முறையிலே அவர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் பிரபாகரன் என்னிடம் கூறினார்.
அடுத்து அவர் கூறியது எனக்கு மகிழ்ச்சியான ஆச்சரியம் அளித்தது. “ஸ்ரீலங்காவுக்கு வந்த நடிகர் சிவாஜி கணேசனுடன், உங்கள் தந்தை இலங்கை தமிழ் சினிமாவின் சார்பில் சச்சரவு பட்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது” என்றார்.
தமிழக சினிமா மீதும், தமிழக கதை நாவல் இலக்கியம் மீதும் தனக்கு இருக்கும் அதீத பற்றை சுருக்கமாக சொல்லிவிட்டு, “ஆனால்,நமக்கென்று மண்வாசனை இருக்கிறதல்லவா? அது ஒட்டுமொத்த உலக தமிழுலகில் தனித்துவ அங்கம் அல்லவா” என்றார்.
எனது கருத்தும் அதே என்றேன். என் தந்தையின் கருத்தும் அதே என்றேன்.
கருணா அம்மான் பற்றி சந்திரிகா கூறியதையும் நான் பிரபாகரனிடம் கூறினேன். “கருணா அம்மான் வெளியில் வந்தால் அவருக்கு அடைக்கலம் தருவேன். அதை உங்களுக்கு எதிரானதாக எடுத்துக்கொள்ள கூடாது என்று சந்திரிகா கூறுகிறார்”
“அதெப்படி..? அது, எங்களுக்கு எதிரான செயற்பாடுதான் என்று சந்திரிகாவிடம் சொல்லுங்கள்” என காரசாரமான விடயத்தை சிரித்தபடியே சொன்னார்.
அடுத்த விடயத்தை நான் சொல்ல விரும்பி இருக்கவில்லை. ஆனாலும், ஒரு தூதுவன் என்ற முறையில் நேர்மை இருக்கவேண்டுமே. ஆகவே சொன்னேன்.
“அதைபோல் நீங்கள் அவரிடம் வந்தாலும் கூட உங்களையும் வரவேற்று அடைக்கலம் தந்து ஏற்றுக்கொள்வார் என சந்திரிகா கூறினார்”
ஒரு வினாடியும் தாமதியாமல் பதில் வந்தது.
“நான் ஒரு போதும் அப்படி அங்கே வந்து அடைக்கலம் கோர மாட்டேன். அதற்கான அவசியமும் ஏற்படாது என சந்திரிகாவிடம் கூறுங்கள்.” என பிரபாகரன், இப்போது சிரிக்காமல் சொன்னார்.
அதற்கு பிறகு மீண்டும் சிரிக்க, சிரிக்க நகைச்சுவையாக பேசினார். கருணா அம்மானை பற்றி பேசினார்.
“கருணா இப்போது கொழும்பிலேதான் ஒளிந்து இருக்கின்றார் என எங்களுக்கு தெரியும். அவர் எங்கு இருக்கிறார் என்பது ஜனாதிபதி சந்திரிகாவிற்கு தெரியாதா? என்னஸ? ரணிலிடம் கேட்க சொல்லுங்கள். ரணிலுக்கு தெரியும் என்பது எங்களுக்கு தெரியும். அவர் கருணாவுக்கு ஏற்கனவே அடைக்கலம் கொடுத்து விட்டார்” என்று மீண்டும் சிரிப்புடன் பிரபாகரன் பேசத்தொடங்கினார்.
அப்புறம் ரணிலை பற்றி பேச்சு ஆரம்பமாகியது. “எப்படி இருக்கின்றார் உங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க?” என்று கண்ணை இமைத்தபடி கேட்டார்.
“அவர் கருணா அம்மானை எங்கே ஒளித்து வைத்திருக்கின்றார் என்றும், அவர் எப்படி கொழும்புக்கு வந்தார் என்றும் எங்களுக்கு தெரியும்” என்று சொல்லி நிறுத்தி விட்டு, “யாரவன்(ர்)..?” என தன் உதவியாளர்கள் பக்கம் திரும்பி கேட்டார். “மௌலானா” என்று யாரோ பதில் கூறினார்கள். “எங்களுக்கு தெரியும் என அவரிடம் கூறுங்கள்.” என்றார்.
“நான் இங்கே வரும் பொழுது ரணில் வெளிநாடு போய்விட்டார். உங்களை சந்திப்பது பற்றி அவருக்கு நான் அறிவிக்கவும் இல்லை. இன்னும் சில தினங்களில் கொழும்பு திரும்பி விடுவார். வந்தவுடன் கட்டாயமாக நீங்கள் சொன்னதை அவரிடம் சொல்கிறேன்.” என்று நான் பிரபாகரனிடம் கூறினேன்.
இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். கொழும்பு அரசியலை பற்றி மேலோட்டமாக பேசினோம். அவர் எந்த இடத்திலும் “இலங்கை அரசாங்கம்” என்ற வார்த்தைகளை பயன்படுத்த வில்லை. “சிங்கள அரசாங்கம்” என்றே திரும்ப, திரும்ப கூறினார்.
மலையக மக்கள் பற்றி, தமிழர் ஐக்கியம் பற்றி, சாதாரண சிங்கள மக்கள் பற்றிய தனது நல்லெண்ணத்தை பற்றியும் பேசினார். பேசினோம். அத்துடன் இச்சந்திப்பு முடிந்தது.
அதுதான் அவருடனான கடைசி சந்திப்பு என நான் அப்போது நினைத்திருக்கவில்லை. ஒரு சமாதான அரசியல் தீர்வு வந்து விடும். அதன் பின் இலங்கை அரசியல் பரப்பில் அவர் ஒரு தீர்மானக்கரமான அரசியல் பாத்திரம் வகிக்க போகின்றார் என நான் அப்போது எண்ணினேன்.
இதன் பிறகு நான் ஒருநாளும் தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை சந்திக்கவே இல்லை.
அன்று என்னைப்போல கிளிநொச்சிக்கு வந்திருந்த ஆறுமுகன் தலைமையிலான இதொகா குழுவும், சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி குழுவும், பிரபாகரன் தலைமையிலான புலிகள் குழுவினரை சந்தித்ததாக நான் அறிந்துகொண்டேன். தயா மாஸ்டர் அதை எனக்கு அப்போது கூறினார்.
ஆனால் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் சந்தித்த சந்தர்ப்பத்திலும் அவர்களை நாம் காணவில்லை.