தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பா?; தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி தீவிர ஆலோசனை..!!
29 Jun,2020
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளையுடன் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. கடந்த 96 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த போதும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தளர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே மீண்டும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோன்று மதுரை மாவட்டத்திலும் கடந்த 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் 30ம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது. இதனால், தமிழகத்தில் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டு மீண்டும் சகஜநிலை திரும்புமா அல்லது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, என்னென்ன தளர்வுகள் கிடைக்கும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
இந்நிலையில்,சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்து வருகிறார். கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கைவிடுவதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கை முடித்துக்கொள்ள முடியாது. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய அரசும் ரயில் போக்குவரத்தை ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. அதனால், தமிழகத்திலும் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்றே சுகாதாரத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.