போர் முடிந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் வட-கிழக்கு இராணுவமயம்! - ஐ.நா நிபுணர் குற்றச்சாட்டு.
19 Jun,2020
இலங்கையில் போர் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும், வடக்கு, கிழக்கு இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழலிலேயே இருப்பதாக, அமைதியாக ஒன்று கூடும், சுதந்திரத்திற்கான உரிமைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், கிளெமென்ட் என்யலெட்சோசி வூல், தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நீடித்த மற்றும் ஆபத்தான ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதும், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் பெரிதும் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், இலங்கையில் கண்காணிப்பு அதிகரித்திருப்பதாகவும், ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தமது பயணத்தின் போது, சமூக ஊடகங்கள் போன்ற இணைய வெளி கண்காணிப்பு உள்ளிட்ட கண்காணிப்பு முறைகள் தொடர்பாக, சிவில் சமூகத்திடம் இருந்து கிடைத்த பல்வேறு அறிக்கைகள் குறித்து தீவிர கவலை கொண்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.
தொலைபேசி அழைப்புகள் கண்காணிக்கப்படுவதாகவும், வீடுகள் அல்லது பணியிடங்களில் கண்காணிப்புகள் இடம்பெறுவதாகவும், புலனாய்வு அமைப்புகளால் ஒளிப்படங்கள் கண்காணிக்கப்படுவதாகவும், ஐ.நா சிறப்பு நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளால் போராட்டங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாகவும், அதன் பின்னர், அத்தகைய போராட்டங்களில் பங்கேற்பவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர், அச்சுறுத்தப்படுகின்றனர், என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பாதுகாப்புப் படையினர் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி தொண்டு நிறுவனங்களுக்குள் நுழைந்து, கேள்விகளை எழுப்பி, அதன் உறுப்பினர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமது பயணத்தின் போது, சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான ஒரு கூட்டத்தில், சிவில் உடையில் இருந்த புலனாய்வுப் பிரிவினர் அதில் பங்கேற்றவர்களைக் கண்காணித்ததாகவும், அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்