வடக்கு, கிழக்கை தமது பிரத்தியேக பிரதேசமாக தமிழ்பேசும் மக்கள் எண்ணுவதில் என்ன தவறு? : விக்கி கேள்வி
01 Jun,2020
தமிழர்கள் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை. தம்மைத் தாமே ஒரே நாட்டினுள் ஆளவிட வேண்டும் என்றே கோருகின்றார்கள், இப்போது தமிழர்களின் தனித்துவ பிரதேசமாக இருக்கும் வடக்கு கிழக்கைத் தமது பிரத்தியேகப் பிரதேசம் என்று தமிழ்ப் பேசும் மக்கள் எண்ணுவதில் என்ன தவறு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்ருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் நியாயமான கோரிக்கையை கைவிட்டால்தான் தமிழர்களுக்கான அபிவிருத்தி வழங்கப்படும் என்பதே பிரதமரதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனிநாட்டு சிந்தனையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு பல திட்டங்கள் மூலம் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகள் வெவ்வேறு என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு கிழக்கு இப்போதும் தனிப்பட்ட பிரதேசமே. அங்கு பெரும்பான்மையர் தமிழ் மொழி பேசுவோர். இவர்கள் 3000 வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்குப் பிரதேசத்திலும் அவற்றைச் சார்ந்துமே வாழ்ந்து வருகின்றார்கள். அங்கு தற்போது வாழும் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்லர்.
வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் எந்தக் காலத்திலும் பெருவாரியாக வாழவில்லை.ஆகவே தற்போது தனி நாடாக இருக்கும் வடக்கு கிழக்கைத் தமது பிரத்தியேகப் பிரதேசம் என்று தமிழ்ப் பேசும் மக்கள் எண்ணுவதில் என்ன தவறு? 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகப் பிரதேசம் என்று கூறப்பட்டது.
இந்த உண்மையை இலங்கை அரசாங்கம் ஏற்றே கையெழுத்திட்டது. 18 வருடங்கள் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டே இருந்து வந்தன. அவ்வாறு இருக்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ எவ்வாறு தனிநாட்டுச் சிந்தனையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும் என்று கூறலாம்? உண்மையில் சிங்கள மக்கள் வடக்கு கிழக்கு சேர்ந்த ஸ்ரீலங்காவை சிங்கள பௌத்த நாடாக கருதுவது தான் தவறு என்று நான் கூறுகின்றேன்.
இலங்கை பூராகவும் ஒரு பௌத்த நாடு, அது ஒரு தனிச் சிங்கள நாடு என்ற சிந்தனையில் இருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுபட வேண்டும். இலங்கையில் இரு வேறு மக்கள் குழுவினர் வெவ்வேறு மொழி பேசி, வெவ்வேறு கலாச்சாரத்தைக் கடைப்பிடித்து,வெவ்வேறு மதங்களைக் கடைப்பிடித்து, அடையாளப்படுத்தக் கூடிய நிலப்பரப்பில், பல நூற்றாண்டு காலம் வாழ்ந்து வருவதால் இந்த நாட்டில் இரு வேறு தேசத்தவர்கள் இருந்து வருகின்றனர் என்பதே உண்மை.
தமிழர்கள் தனிநாடு கோரவில்லை. தம்மைத் தாமே ஒரே நாட்டினுள் ஆளவிட வேண்டும் என்றே கோருகின்றார்கள். அவர்கள் வாழ்க்கையில் சிங்கள அரசியல்வாதிகள் உள்நுழைவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் தமிழர்கள் சிங்களப் பொது மக்களுடன் எந்தவித கோப தாபம் அற்றவர்கள்.
எமது மக்கள் பொருளாதார அபிவிருத்தியை எதிர்நோக்கி அங்கலாய்க்கின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் பிரதமர் தமது செவ்வியில் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயத்தை நாம் மனதில் நிலைநிறுத்த வேண்டும்.
முன்பு அவர்களுக்கு (தமிழ் மக்களுக்கு) மறுக்கப்பட்டிருந்த வாய்ப்புக்களைப், பல திட்டங்கள் மற்றும் வளர்ச்சியின் மூலம் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது தமது விருப்பம் என்று கூறியுள்ளார். அதாவது அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு பொருளாதார அபிவிருத்தியை மறுத்ததாக ஏற்றுக் கொள்கின்றார்.
2015 வரையில் அவரின் ஆட்சி இருந்ததே. அப்போது அவர் தமிழர்களுக்காக இயற்றிய செயற்றிட்டங்கள் என்ன? ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புக்கள் என்ன? ஏற்படுத்திய வளர்ச்சி என்ன? அன்று ஏற்படுத்தாத பொருளாதார வளர்ச்சியை இனித்தான் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றாரா? மனம் இருந்திருந்தால் 2009 போர் முடிந்தவுடன் தமிழ் மக்களுக்காக பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம். எமது சிறைக்கைதிகளை விடுவித்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவர் 2020ல் இவ்வாறு கூறுவது நகைப்புக்கு இடமாக இருக்கின்றது.
பிரதமர் எப்பொழுது வேண்டுமானாலும் பொருளாதார அபிவிருத்தியை வட கிழக்கில் ஏற்படுத்தலாம். ஆனால் அதுவல்ல அவருக்குத் தேவையானது. தமிழ் மக்கள் தமது சட்டப்படியான, நியாயமான, யதார்த்தமான அரசியல் கோரிக்கைகளைக் கைவிட்டால் தான் பொருளாதார அபிவிருத்தியை தருவார் என்று தான் கூறுகின்றார்.
உரிமைகளைக் கைவிடு ஊட்டங்களை நாம் தருவோம் என்பது தான் அவரின் பேச்சின் பொழிப்பாகும்.ஆகவே எந்தச் சிங்கள அரசியல்வாதியும் தமிழர்களை அடிமைப்படுத்தி வைக்கவும், தம்மை அண்டித் தமிழர்கள் வாழவுமே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளனர், வருகின்றனர். பிரதமர் அதற்கு விதிவிலக்காக இனி இருப்பார் என்று நம்ப முடியாதிருக்கின்றது.
எமது அரசியல்வாதிகள் மக்களின் மனதுக்கு மாறாக நடக்கின்றார்கள் என்றால் அது பிரதமர் போன்றவர்கள் எமது அரசியல்வாதிகளுக்கு சுயநலப் பாதைகளைக் காட்டி எமது அரசியல்வாதிகள் தமது பாதையும் பயணமும் மாறச் சூழ்ச்சிகள் செய்து வருவதாலேயே.
தமிழ் மக்கள் வெறும் பொருளாதார அபிவிருத்தியையே நாடி நிற்கின்றார்கள் என்று பிரதமர் கூறுவது எமது வழி வகையற்ற பாதிக்கப்பட்ட மக்களை எலும்புத் துண்டுகளைக் கொடுத்து தன்பக்கம் ஈர்க்க முடியும் என்று அவர் எண்ணுவதாலேயே. மக்களின் மனம் அறிந்த அரசியல்வாதிகள் வெகுவிரைவில் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வர இருக்கின்றார்கள் என்பதை அவருக்குக் கூறிவைக்கின்றேன். அவற்றைத் தடுக்கு முகமாக சர்வாதிகாரப் போக்கினை அவரின் சகோதரர் எடுப்பாராகில் அதற்கும் முகம் கொடுக்க எமது மக்கள் தயாராகவே உள்ளனர்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடகிழக்கில் அவர்களுக்குரிய மனித உரிமைகளைச் சிங்கள அரசாங்கத்தவர்கள் தடை செய்கின்றார்கள் என்பதே உண்மை. வடகிழக்கு தமிழ் மக்கள் தமது உரிமைகளைத்தான் கேட்கின்றார்கள்.
அதை அவர்களுக்குக் கொடுக்காது நாட்டில் பல பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள், ஆகவே வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு மட்டும் உரிமைகளை வழங்கமுடியாது என்று கூறுவதன் அர்த்தம் என்ன? நீங்கள் உரிமைகள் கேட்டால் இன்னுமொரு 1958யும் 1983யும் தெற்கில் உள்ள தமிழர்களுக்கு எதிராகக் கொண்டு வருவோம் என்பது தானே? இவ்வாறான பூச்சாண்டி காட்டி எமது தமிழ் மக்களை அடிபணிய வைத்த காலம் மலையேறிவிட்டது என்பதை ஐம்பது வருடங்கள் அரசியல் செய்த பிரதமர் உணரவேண்டும்.
இன்று உலகம் முழுவதிலும் இலங்கை அரசாங்கம் பற்றியும் அதன் அரசியல்த் தலைவர்கள் பற்றியும் போதிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.
வடக்கு கிழக்குக்கு வெளியில் தமிழர்கள் உள்ளார்கள். ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் தமது உரிமைகளைக் கேட்கக்கூடாது என்ற சிறுபிள்ளைத்தனமான வாதங்களை மாண்புமிகு பிரதமர் முன்வைக்காமல் இருந்தால் நல்லது. வடகிழக்கிற்கு வெளியில் இருக்கும் தமிழர்கள் தாம் எங்கு வாழவேண்டும். வசிக்க வேண்டும் என்பதைத் தாமே தீர்மானித்துக் கொள்வர்.
ஒருமித்த நாட்டினில் வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள், தாம் ஒரு தேசம் என்ற முறையில் தம்மைத்தாமே ஆளும் உரிமை படைக்க வேண்டும் என்பதையே நாடுகின்றார்கள். அது அவர்கள் பிறப்புரிமை. 3000 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து, அடையாளப்படுத்தப்படக் கூடிய பிரதேசங்களில் தமது மொழி, கலை, கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்த மக்கட்கூட்டம் சட்டப்படி கோரும் அவர்கள் உரித்தை வழங்காமல் பிரதமர் வாய்க்கு வந்தபடி பேசுவது அவருக்கு அழகல்ல என அவர் கூறியுள்ளார்.