ஒற்றுமையாக ஓரணியில் நின்று தேர்தலை நாம் எதிர்கொள்வோம் அதிக ஆசனங்களே தமிழ்க் கூட்டமைப்பின் இலக்கு
30 May,2020
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்த உள்ளேயும் வெளியேயும் சதித்திட்டங்கள் தீட்டப்படக்கூடும். கண்டபடி விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். இவற்றையெல்லாம் தாண்டி ஒற்றுமையாக ஓரணியில் நின்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்திக்க வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் எமக்கு மிக முக்கியமானது. இந்தநிலையில், தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் எதிர்பார்த்திருக்கின்றேன். நாளை (இன்று) பெரும்பாலும் தீர்ப்பு வரக்கூடும். எனினும், தேர்தலை நாம் எந்தவேளையிலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இம்முறை காத்திரமான தேர்தல் அறிக்கையை நாம் தயாரிக்க வேண்டும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அண்மையில் நாம் நடத்திய சந்திப்பின்போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் வாக்குறுதிகளை அவர் வழங்கியிருந்தார். ஆனால், அந்த வாக்குறுதிகள் அப்பிடியே இருக்கின்றன. இது தொடர்பில் நாளை (இன்று) நாம் கலந்து பேசி ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும்” – என்றார்.