இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை கைவிட்டுள்ளது! - மனித உரிமை கண்காணிப்பகம்
20 May,2020
இலங்கையின் நீண்டகால ஈவிரக்கமற்ற போர், முடிவுக்கு வந்து பதினொரு வருடங்களாகியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியன தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை கைவிட்டுள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகத்தின், தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.
“ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிவகைகள் குறிந்து பகிரங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, மீண்டும் குரோத உணர்வு தோன்றுவதை தடுக்க வேண்டியது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமான கொள்கைகளை பின்பற்றுகின்றது. கண்மூடித்தனமான பதில்களில் ஈடுபட்டுள்ளது.
போரின் இறுதி தருணங்களில் பாதுகாப்பு செயலாளராக விளங்கிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மீது போர்க் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் சிறுபான்மையினத்தவர்களால் அச்சத்துடன் பார்க்கப்படுகின்றார்.
அவரது நிர்வாகம் ஆபத்தான வெறுப்பை தூண்டுவதற்கு பதிலாக, நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும்.
அரசாங்கம் தற்போது கொரோனா வைரசினை பயன்படுத்தி மதரீதியிலான பதற்றத்தை அதிகரிக்க முயல்வதுடன் மத சுதந்திரத்தை மீறுகின்றது என்றும், மனித உரிமை கண்காணிப்பகத்தின், தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.