தமிழர்களை அழித்த நாளன்று 14,617 பேருக்கு பதவி உயர்வு : சவேந்திர சில்வா
19 May,2020
இலங்கையில் தொடர்ந்த முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 11 வருடங்கள் நிறைவடைகின்றது. இந்நிலையில், இன்று யுத்தத்தில் இறந்தவர்களுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், தென்னிலங்கையிலும் யுத்த வெற்றி நிகழ்வு ஆரவாரமின்றி நிகழவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2009 ஆம் ஆண்டு 18 ஆம் திகதி விடுதலைப்புலிகளுடன் நந்திகடல் பகுதியில் இறுதிக்கட்ட போர் நடை பெற்றது. இந்த போரில் இறுதியில் வன்னிப்பெரு நிலப்பரப்பு ஸ்ரீலங்கா இராணுவத்தின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டில் வந்தது .
இந்த நிலையில் நாட்டில் வாழும் அனைவருக்கும் யுத்தவெற்றியின் பிரதி பலன் கிடைக்க வேண்டும் என இராணுத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை யுத்த வெற்றியை முன்னிட்டு 14,617 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இராணுத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த பதவி உயர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.