வந்ததிகளைப் பரப்ப சிலர் முயற்சி- வைத்தியர் சத்தியமூர்த்தி
06 May,2020
பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப சிலர் முயற்சி செய்யலாம் எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்குக் காரணம் ஆய்வுகூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திலும் யாழ். போதனா வைத்தியசாலையிலும் இடம்பெறுகின்றன.
நாம் தற்போது உள்ள சூழ்நிலையில் இது எமக்கு முக்கியமான ஒன்றாகும். இந்த பரிசோதானையானது மிகவும் அவதானமாகவும் சரியான முறையிலும் முன்னெடுக்கப்படுகின்றது. நாம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றியே பரிசோதனைகளை மேற்கொள்கின்றோம்.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் சிகிச்சைக்காக எமது வைத்தியசாலைச் சூழலுக்கு வரும்போதுதான் மிகவும் அபாயகரமான சூழ்நிலையை நிலவுகிறது. குறிப்பாக தொற்றுக்குள்ளானவர் முழுமையாக தனது சுய விபரங்களை வெளியிடாது விட்டால், வைத்தியசாலையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனினும், நாம் ஆய்வு கூடங்களில் செய்கின்ற பரிசோதனைகள் அனைத்தும் மிக அவதானமாகச் செய்யப்படுகின்றன. அங்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. இதனை பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதிலும், பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனெனில் இன்னும் சில நாட்களில் பல்கலைக்கழக ஊழியர்கள் பணிக்குத் திரும்பலாம். பல்கலைக்கழக மாணவர்கள் வரலாம். அவ்வாறு பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் போது பரிசோதனைகளுக்கு எவ்வித தடங்கலும் வரக்கூடாது.
ஏனெனில் எமது பகுதிகளில் தொடர்ச்சியாக பரிசோதனைகள் இடம்பெற்று எங்கள் பிரதேசங்களில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே இதற்கு யாரும் தடங்கல் ஏற்படுத்திவிடக் கூடாது. ஒரு சிலர் பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளைப் பரப்பக்கூடும். அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளோம். வடக்கு மாகாணத்தில் வைத்திய சேவையைப் பொறுத்தவரையில் இப்போது எமக்கு முக்கிய தேவையாக இந்த பரிசோதனை உள்ளது.
பல்கலைக்கழகங்கள் என்பது ஆராய்ச்சிகளை செய்து உண்மையான தகவல்களை வெளியிடுகின்ற ஓர் நிறுவனம். இவ்வாறான ஆராய்ச்சி நிலையங்களில்தான் உண்மையான தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
யாழ். போதனாவில் இடம்பெறுகின்ற பரிசோதனையில் பல்கலை மருத்துவ பீடத்தின் பங்களிப்பு உள்ளது. மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறவில்லை.
அதற்குக் காரணம் ஆய்வு கூடத்தில் சில சரிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவைகள் இருந்தன. தற்போது அவை சரி செய்யப்பட்டு இன்றிலிருந்து பரிசோதனைகள் இடம்பெறுகின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.