பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழப்பு ? மறுக்கும் வெளிவிவகார அமைச்சு!
27 Apr,2020
பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டதல்ல என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அங்குள்ள இலங்கையர்களின் மரணம் தொடர்பாக மருத்துவமனை பதிவுகள் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மூலமாகவே எந்தவிதமான தகவல்களும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்றும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுகின்றது. இறப்புச் சான்றிதழ் இல்லாமல், உயர் ஸ்தானிகராலயம், தூதரகங்கள் அல்லது தூதரக அலுவலகங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் இறப்பை உறுதிப்படுத்த முடியாது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் வசிக்கும் ஒரு இலங்கையரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது.
எவ்வாறாயினும், டுபாய் மற்றும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகங்களினுடாக இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.