அழைப்பு விடுத்தால் விக்னேஸ்வரனின் கூட்டணியில் இணையத் தயார்: வரதராஜப்பெருமாள்
03 Mar,2020
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தங்களது கூட்டணியில் இணைவது சம்பந்தமாக அழைப்புவிடுத்தால்தான் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவில் இதுவரை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுவது என தற்போது வரை தீர்மானித்துள்ளோம். எனினும் வடக்கு கிழக்கு சார்பாக புதிய கூட்டணிகள் அமைக்கப்படுவதால் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் நாம் இணைவது சம்பந்தமாக அவர்கள் அழைப்பு விடுத்தால் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.
நமக்கும் அவர்களுக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். அதனை விடுத்து தேர்தல் காலங்களில் இணையும் கூட்டணியாக இருக்கக்கூடாது. இதுவரை எனக்கு அவர்களிடம் இருந்து அழைப்பு கிடைக்கவில்லை. அழைத்தால் பேசத் தயாராகவே இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.