இலங்கை அரசாங்கம் விலகினால் என்ன, ஐ.நா. பிரேரணை தகுதி இழக்காது- இரா.சம்பந்தன்
22 Feb,2020
ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகினாலும் அந்தப் பிரேரணை தகுதி இழக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது எனவும் நிறைவேற்றப்பட்ட பிரேணையிலிருந்து விலகுவது அவர்களது விருப்பம் என்றும் தெரிவித்துள்ள அவர், பிரேரணை அப்படியேதான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோதும், அதற்கு முன்னதாகவும் சர்வதேச மனித உரிமைச் சட்டமும் மனிதாபிமான சட்டமும் மிக மோசமாக மீறப்பட்டு பல போர்க்குற்றங்கள் நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
யுத்தம் முடிந்த சில நாட்களில் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வந்திருந்தார். யுத்தம் சம்பந்தமாக சில கருமங்களை மேற்கொள்ளவும் சிலவற்றை அறிவிக்கவுமே வந்தார்.
அப்போது மஹிந்தவை சந்தித்தபோது, பொறுப்புக்கூறல் சம்பந்தமாக தாம் நடவடிக்கையெடுப்பதாக மஹிந்த வாக்குறுதியளித்து, அவர்களது கூட்டறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. இதன்பின்னர் அந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து பான் கீ மூன் தமக்கு அறிக்கையளிக்க நிபுணர் குழுவொன்றை அமைத்தார். இலங்கை அரசாங்கமும் ஒரு குழுவை நியமித்தது. செயலாளர் நாயகம் நியமித்த குழுவும் அறிக்கை சமர்ப்பித்தது.
நாங்கள் எடுத்த சில முயற்சிகள் காரணமாக, அமெரிக்க இராஜாங்க அமைச்சரைத் தொடர்புகொண்டு, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேட்டதற்கு அமைய, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா 2012இல் பிரேரணை சமர்ப்பித்தது. 2015இல் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொறுப்புக்கூறல் சம்பந்தமாக அந்தத் தீர்மானத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
இலங்கைக்கு 2 வருடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. கால அவகாசம் முடிந்ததும், மீண்டும் 2 வருடங்களை இலங்கை கேட்டது. 2017இலும், மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் கேட்டு 2019ஆம் ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மீளவும் அவகாசம் கொடுத்து 2021ஆம் ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நடந்தபோது ஆட்சியிலிருந்தவர்கள், 2019இல் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பி இன்று பிரேரணையிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர்.
2015ஆம் ஆண்டு பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியது. நிறைவேற்றப்பட்ட பிரேணையிலிருந்து விலகுவது அவர்களது விருப்பம். ஆனால், நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அது பாதிக்காது. பிரேரணை அப்படியே இருக்கும். அது தகுதியை இழக்காது” என்று குறிப்பிட்டார்.