மஹிந்த அரசு தமிழர்களை காணாமல் ஆக்கியதற்கு விமல் வீரவன்ச சாட்சி- செல்வம் எம்.பி.
05 Feb,2020
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்கள் வகை தொகையின்றி காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதற்கு விமல் வீரவன்சவே சாட்சியென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் காணாமல் போனவர்களை மண்ணுக்குள் தோண்டிப் பார்க்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “தமிழர்களின் ஆறாத வடுவாக உள்ள காணாமால் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு காணாமல், தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் ஏமாற்றி வருகின்றன.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதியொரங்களில் இன்றும் வலிகளைச் சுமந்து கண்ணீருடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமது பிள்ளைகள், என்றோ ஒரு நாள் தம்மிடம் வந்து சேர்வார்களா என்ற ஏக்கத்துடனோயே அந்த தேடலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான உறவுகளை புலனாய்வு விசாரணைகள் என்றும் சந்தேகப் பார்வையுடனும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்துவரும் அரசாங்கம் தற்போது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் காணாமல் போனோரை மண்ணுக்குள் தோண்டிப் பார்க்குமாறு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரான விமல் வீரவன்சவின் இக்கருத்தானது அரசாங்கத்தின் கருத்தாகவே பார்க்க முடிகின்றது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் போர் முடிவுக்கு வந்தபோது வட்டுவாகல் பாலத்திலும் ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியிலும் நலன்புரி முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரையே இந்த உறவுகள் தேடி அலையும் போது இவ்வாறான கருத்தை விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை அரசாங்கத்தின் உண்மை முகத்தைக் காட்டியுள்ளது.
எனவே மஹிந்த ஆட்சிக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதனை தனது வாக்குமூலமாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமையினால் அவரை உடன் கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பாக சர்வதேசமும் கவனஞ்செலுத்த வேண்டியதுடன் அடுத்து வரும் ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் விமல் வீரவன்சவின் கருத்தினை அவதானித்திற்குக் கொண்டுசெல்ல நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.