சிங்களம் மட்டும் தமிழீழத்திற்கான திறவுகோல் : ரெலோ
03 Feb,2020
இலங்கையின் சுதந்திர தினத்தன்று காலி முகத்திடலில் இடம்பெறும் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்பதன் ஊடாக தமிழ் மக்கள் இதுவரை கோரி வந்த தனி நாட்டுக் கோரிக்கையை அங்கிகரிப்பது போன்றும் இக்கோரிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இலங்கை சோசலிச குடியரசின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழர்களின் உணர்வை மலினப்படுத்தும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தன்று இடம்பெறும் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என அரச தரப்பின் முக்கிய அமைச்சர்கள் சூழுரைத்து வரும் நிலையில் இம்முறை காலிமுகத்திடலில் இடம்பெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்படும் வாய்ப்பு இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இந்த செயற்பாடானது தமிழ் மக்கள் இதுவரை கோரிவந்த தனி நாடு தனிக்கொடி தனித்தேசிய கீதம் போன்ற கோரிக்கைகளை அங்கிகரிப்பது போன்றும் இக்கோரிக்கையை வலுப்படுத்துவது போன்றும் அமைந்துள்ளது. பொதுவாகவே தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை என்ற நாடு எமக்கானது அல்ல அது சிங்கள பௌத்த நாடு எமக்கான தேசம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்ற மனநிலை உள்ளது.
தமிழ். மக்களில் பலர் இவர்கள் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடினால் என்ன ? தமிழில் பாடினால் என்ன ? எமக்கென தனி தேசிய கீதத்தை உருவாக்குவோம் என்ற மன நிலையை உருவாக்கியுள்ளது.
ஒரு வகையில் பார்த்தால் இந்த அரசாங்கம் நாட்டின் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதை தடுப்பதென்பது தமிழ்மக்களின் தமிழ்த்தேசிய உணர்வையும் சுயநிர்ணயத்தின் அவசியத்தையும் உணரச்செய்யும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
இரண்டு மொழிகள் மட்டுமே உள்ள ஒரு நாட்டில் அதன் தேசிய கீதத்தில் ஒரு மொழி புறக்கணிக்கப்படுவது என்பது அந்த மொழி பேசுபவர்கள் தமக்கான ஒரு அங்கீராத்தை இழந்ததாகவே உணருவார்கள் அதன் வெளிப்பாடுகளே வன்முறைகளாகவும் போராட்டங்களாகவும் மாறுகின்றன.
தற்போதைய அரசாங்கமும் அதை வழி நடந்துபவர்களும் உண்மையிலேயே ஒன்றிணைந்த நாட்டிற்குள் ஐக்கியத்துடன் அனைவரும் வாழவேண்டுமென கருதினால் இந்த நாட்டில் சிங்கள மொழிக்கும் சிங்கள மக்களுக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளும் இந்த நாட்டில் உள்ள தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துவதன் மூலமே பிரிவினைவாதத்தை இல்லாமல் செய்து நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
அதை விடுத்து தமிழர்களையும் தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் நிலை தொடருவதென்பது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரிந்து செல்லும் உணர்வை வலுவடையச் செய்யுமேயன்றி இன நல்லிணக்கத்திற்கு ஒருபோதும் வழிசமைக்காது