தமிழ் மக்களையும் இந்நாட்டின் அங்கமாக அரசு ஏற்கவில்லை: தேசியகீத புறக்கணிப்பு இதனையே காட்டுகிறது என்கிறார் விக்கி
03 Feb,2020
இத்தடவை நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருப்பதானது, தமிழ் மக்களும் இந்த நாட்டின் அங்கம் என்றோ அவர்களின் மொழி, கலாசாரம், பூர்வீகம் என்பவற்றை ஏற்றுக்கொள்வதாகவோ இல்லை என்பதையே எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
கடந்த ஐந்து வருடக் காலத்தில் சிங்கள மொழியைத் தொடர்ந்து தமிழ் மொழியிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதத்தை இசைப்பதென்றும் எனினும் தேசிய கீதம் இசைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் அவரவர் தாய் மொழியில் பாட முடியும் எனவும் கூறப்பட்டிருப்பதானது, ஏதோ தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் சலுகையைப் போன்றே தெரிகிறது.
இதன்மூலம் உண்மையான புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு முன்னாள் நீதியரசரும் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தெரிவித்தார்.
இலங்கையில் 72ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருக்கும் கூற்று தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இசைக்கப்பட்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களுக்கும் உரிய அந்தஸ்து வழங்கப்பட்டதாக கருதப்பட்டது.
எனினும் தற்பொழுது சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என கூறுவதன் மூலம் சிங்கள மேலாதிக்கத்தையே அது எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
மேலும் அவரவர் தங்கள் தாய்மொழியில் அதனை பாடமுடியும் என்று கூறுவது மொழிக்கு தரப்பட்ட சலுகையாகவே எண்ணத் தோன்றுகின்றது. இதன் மூலம் குறித்த நபர் வாய்மூடி மெளனமாகவும் கூட இருக்கலாம்.
சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழ் மக்கள் காலாகாலமாக புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். அதற்கு இதனையும் சிறந்த உதாரணமாகக் கொள்ள முடியும்.
இதேவேளை, இந்தியாவில் ஒரு மொழியிலேயே தேசிய கீதம் பாடப்படுவதாக சில உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் வங்காள மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. வங்காள மொழி அங்கு சிறுபான்மை மொழியாகும்.
எனினும், பெரும்பான்மை மக்கள் பேசும் இந்தி மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை. அதேபோன்று இலங்கையிலும் சிறுபான்மையானோரால் பேசப்படும் தமிழில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடினால், அதனை இந்தியா போன்று பெருந்தன்மையுடன் இலங்கை வாழ் சிங்கள மக்களும் ஏற்றுக்கொண்டால், அது வரவேற்கத்தக்கதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய கீதம், நாடு சுதந்திரம் பெற்ற சந்தர்ப்பத்தில் சிங்களத்திலும் தமிழிலும் ஒன்றன்பின் ஒன்றாக இசைக்கப்பட்டது.
பின்னர் அது கைவிடப்பட்டிருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற சமயம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது புதிய அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் பேராதரவுடன் பதவியேற்ற கையோடு தேசிய கீதத்தின் தமிழ் வடிவத்துக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ அந்தஸ்தை கைவிடும் விருப்பத்தை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ் மக்கள் தமது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டிருந்தனர்.
தமிழில் தேசிய கீதத்தை பாடுவது அரசியலமைப்புக்கு இசைவானது என்றும் சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மற்றும் தேசிய மொழிகள் எனவும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது சரத்துகள் இதனை உறுதிப்படுத்துகின்றன என்றும் தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ இச்சர்ச்சை தொடர்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கருத்து வெளியிடுகையில், சிங்கள மக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட பகுதிகளில் இடம்பெறும் தேசிய வைபவங்களில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பயன்படுத்தலாம் எனவும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதிகளி்ல் சுதந்திரத்துக்கு பின்னர் நடைமுறையில் இருந்தவாறு தமிழ் பிரதேசங்களில் தமிழில் இசைக்கலாம் எனவும் கூறியிருந்தார்.
மேலும், எதிர்வரும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படுமா என அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பிரதமர் அது தொடர்பில் பதிலளிக்கையில், அரசாங்கம் இவ்விடயம் தொடர்பாக எதுவித முடிவையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே சுதந்திர தினத்தின்போது சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கின்றார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியனவும் இச்செயலை கண்டித்துள்ளன.
சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடாகும்.
நாடு என்ற ரீதியில் முன்னேற வேண்டுமாயின் தமிழ், முஸ்லிம் மக்களின் தனித்துவங்களுக்கும் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியும் மேலும், தேசிய கீதம் சிங்களத்தில் மட்டும் பாடப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பானது நல்லிணக்கத்தை மட்டுமன்றி அரசியலமைப்பையும் மீறும் செயல் என இலங்கை தமிழரசுக் கட்சியும் கண்டித்துள்ளன