தமிழர்களுக்கு தீர்வு இல்லையேல் சர்வதேசம் நேரில் தலையிடும்: சம்பந்தன் எச்சரிக்கை
26 Jan,2020
தன்மானத் தமிழர்கள். நாம் இந்த நாட்டின் தனித்துவமான இனத்தவர்கள். எமக்கென்று சுயநிர்ணய உரிமை இருக்கின்றது.
எமக்கென்று கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் இருக்கின்றன. எனவே, இந்தப் புதிய அரசு எம்மை அடிபணியவைத்து எதனையும் சாதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கானத் தீர்வுப் பொதியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தட்டில் வைத்துத் தரும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கனவு காண்பதில் எந்தவிதப் பயனும் இல்லை.
முதலில் அவர்கள் எம்முடன் நேரில் வந்து பேச வேண்டும். அதைவிடுத்து இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைக் கூட்டமைப்பினர் நாடுவதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை.
ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையிலும் பௌத்த மதத்துக்கு முதலிடம் வழங்கும் முகமாகவும் சிங்கள மக்கள் ஏற்கும் விதத்திலுமான அரசியல் தீர்வைத்தான் எம்மால் காண முடியும் என்று சபை முதல்வரும் வெளிவிவகார அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நேற்றைய தினம் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை அரசிடம் நாம் கேட்பதெல்லாம் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வையே.
உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு மறுக்கப்பட்டால் நாம் வெளியக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வைக் கோர வேண்டிய நிலைமை வரும். அதன்போது சர்வதேசம் நேரில் தலையிடும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு நாட்டின் நலன் கருதியும் மக்களின் நன்மை கருதியும் ஜனநாயக வழியில் செயற்படும் என்றே நாம் எதிர்பார்க்கின்றோம்.
தீர்வு விடயம் தொடர்பில் இந்த அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால், எமது எதிர்பார்ப்பை வீணடிக்கும் வகையில் இந்த அரசு தினந்தோறும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே எமது கொள்கையாகும்.
துரதிஷ்டவசமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. நாம் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்த போதிலும் பேச்சு மேசைக்கு எம்மை அழைத்து காலத்தை வீணடித்து இறுதியில் ஏமாற்றியது மஹிந்த அரசு.
தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கக்கூடாது என்பதில் மிகவும் விடாப்பிடியாக இருந்தது மஹிந்த அரசு. இந்தத் தவறை கோட்டாபய அரசும் செய்யக்கூடாது என்றே வலியுறுத்துகின்றோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியே தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனவும் சர்வதேசம் வலியுறுத்தி வருகின்றது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், நோர்வே, சுவிஸ் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நாடுகளின் ஒருமித்த வலியுறுத்தல் இதுவே. அதனால்தான் இலங்கைக்கு வரும் சர்வதேசத் தலைவர்கள் எம்மையே சந்திக்கின்றனர்.
எமது கருத்துக்களை ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் கருத்தாக அவர்கள் ஏற்கின்றனர்.
எனவே, தமிழர்களுக்குரிய தீர்வை புதிய அரசு வழங்கியே தீரவேண்டும். இல்லையேல் சர்வதேசம்தான் நேரில் தலையிடும். அதை எவராலும் தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.