முள்ளிவாய்க்காலில் உள்ள காணிகளை பறித்தால் தமிழர்கள் எங்கு செல்வார்கள்?;ரவிகரன் கேள்வி
23 Jan,2020
முள்ளிவாய்க்காலில் உள்ள காணிகளை பறித்தால் தமிழர்கள் எங்கு செல்வார்கள்?;ரவிகரன் கேள்வி
முள்ளிவாய்கால் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்குரிய காணிகளை, இராணுவத்தினரும் கடற்படையினரும் அபகரித்தால் அப்பகுதியில்வாழும் தமிழ் மக்கள் எங்கே போவது என்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது, முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள ஒரு தொகுதி காணிகளை இராணுவத்தினருக்கு வழங்குவதற்கான அனுமதியை அபிவிருத்திக் குழுவினரிடம் பிரதேச செயலர் கூறியிருந்த வேளையிலேயே ரவிகரன் இவ்வாறு கேள்வியெழுப்பியிருந்தார்.
இங்கு தொடர்ந்து பேசிய ரவிகரன்,
இராணுவத்தினருக்கு மக்களின் காணிகள் வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.ஏற்கனவே முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் சுமார் 617ஏக்கர் காணிகளை கடற்படையினர் அபகரித்து வைத்திருக்கின்றனர்.
இந் நிலையில் மீண்டும் மக்களுடைய காணிகள் இவ்வாறு அபகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இராணுவம் மற்றும் கடற்படையினருக்கும்தான் முள்ளிவாய்க்கால் கிராமமெனில் அங்குள்ள மக்கள் எங்கு செல்வது.
இவ்வாறாக முள்ளிவாய்க்காலில் இராணுவ முகாங்களுக்காகவும், கடற்படை முகாங்களுக்காகவும், மக்களின் காணிகள் அபகரிக்கப்படுமானால், முள்ளிவாய்க்கால் பகுதி இராணுவத்திற்கும், கடற்படைக்குமே உரியதென அரசாங்கம் வெளிப்படையாகவே தெரிவிக்கட்டும்.
ஏற்கனவே கடற்படையினர் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் நந்திக்கடல் கரையோரப் பகுதியை ஆக்கரமித்துள்ளனர்.
இதன் மூலம் பல நூற்றுக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளினது வாழ்வாதரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போது இக்காணிகளை சில மககள் உரிமை கோரியிருக்கலாம், ஏனையவர்கள் தற்போது உரிமை கோருவதற்கு முன்வராத சூழ்நிலை இருந்திருக்கலாம், அதற்காக அக் காணிகளை இராணுவத்தினருக்கு வழங்க அனுமதிக்க முடியாது. இந்த முள்ளிவாய்க்கால் காணிகள் அனைத்தும் தமிழ் மக்களினுடைய காணிகளாகும்.
மாறாக கடற்படைக்கோ, இராணுவத்திற்கோ உரிய காணிகள்அல்ல. எனவே தற்போது மக்களுக்குரிய காணிகளில் இருக்கின்ற இராணுவத்தினரும், கடற்படையினரும் என்றோ ஓர்நாள் அப்பகுதிகளிலிருந்து வெளியேறும் சூழ்நிலை வரும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.