பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
21 Jan,2020
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி, பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால் அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் குறித்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படப்போது வழக்கு தொடர்பாக சி.பி.ஐ.தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும் ராஜீவை கொல்ல பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு குறித்து சி.பி.ஐ.தாக்கல் செய்த அறிக்கையில் எந்த புதிய விடயமும் இடம்பெறவில்லை என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பெல்ட் வெடிகுண்டு பற்றி புதிய தகவல்களை திரட்ட முடியவில்லை என சி.பி.ஐ.தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடரந்து பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இவ்விடயம் தொடர்பாக 2 வாரத்தில் பதில் வழங்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.