தமிழ்ப் பகுதிகளில் மீண்டும் சிங்களத்திற்கு மாற்றப்படும் பெயர்ப்பலகைகள்
21 Jan,2020
மன்னாரில் அமைக்கப்பட்டுள்ள பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட்டிருந்த நிலையில், அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, செல்வாரி கிராமத்தில் அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபையின் பனந்தும்பு உற்பத்தி நிலையம் கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் விமல் வீரவன்ச, பனந்தும்பு உற்பத்தி நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வத்தார்.
குறித்த பெயர்ப் பலகையில் தமிழில் முதலிலும் இரண்டாவது சிங்களத்திலும் மூன்றாவது ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.
அந்தப் பெயர்ப்பலகையில் தமிழுக்கு கொடுக்கப்பட்டிருந்த முன்னுரிமையை அவதானித்த அமைச்சர் விமல் வீரவன்ச, அந்த பெயர்ப் பலகையை கழற்றிவிட்டு உடனடியாக சிங்களத்தில் முதலாவதும் தமிழில் அடுத்ததாகவும் வரும் வகையில் மாற்றும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த பெயர்ப்பலகை அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தரவிற்கு அமைய சிங்கள மொழிக்கு முதலிடம் வழங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மாற்றப்பட்ட பெயர்ப்பலகையின் ஒளிப்படத்தை மகிழ்ச்சியுடன் அமைச்சர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.