தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே புதிய அரசாங்கம் முன்னெடுக்கிறது –
20 Jan,2020
தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என ரெலோ கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களைப் புறக்கணிக்கும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருகிறது. ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரையில் கூட சிங்கள மக்களின் ஜனாதிபதியாகத் தான் அவர் தனது கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அவர் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. எனவே நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இப்படியான விடயங்களைக் கண்டிக்க வேண்டும்.
தமிழ், முஸ்லிம், மலையக மக்களை ஜனாதிபதி கருத்திற்கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை அரசாங்கத்திற்குக் கொடுக்கவேண்டும். அடம்பிடிப்பது விடாப்பிடியாக செயற்படுவது அவர்களுக்கு நட்டத்தையே கொடுக்கும்.
எனவே ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்வோம். தேவைப்பட்டால் வரவிருக்கும் ஐ.நா. அமர்வில் கூட்டமைப்பு சார்பாக களம் இறங்கத் தாயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.