13 ஆவது திருத்தம் தொடர்பான கோட்டா, மஹிந்தவின் கருத்துக்கள் தேர்தலை நோக்கியதே – சிவமோகன்!
16 Jan,2020
சர்வதேச ஒத்துழைப்புடன் போரை நிறுத்திவிட்டு, தமிழர்களின் தீர்வுக்கு மட்டும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமில்லை என பிரதமர் மஹிந்த கூறுவதானது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 13 பிளஸ் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமரின் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் எதிர்பார்த்தது போல புதிய அரசு ஒரு இராணுவ சிந்தனையுடன் செயற்படுவது தெளிவாக தெரிகிறது. சிவில் நிர்வாகங்களில் இராணுவ புலனாய்வாளர்களின் செயற்பாடு பரவலாகி காணப்படுகின்றது.
இனப்படுகொலையை செய்தவர்கள் அரச நிர்வாகங்களில் உயர் பதவிகளை பெற்றிருக்கிறார்கள். இராணுவ கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களை வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பதே அதற்கான காரணம். இது தமிழ் மக்களின் வாழ்வியலில் பிரச்சனையை ஏற்படுத்தி நிக்கின்றது.
13வது திருத்தம் தொடர்பாக சிந்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஆனால் அதிஉயர் அதிகாரத்தை பெற்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, 13 வது திருத்தத்தில் உள்ள பலவிடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுகிறார். குறிப்பாக காணி பொலிஸ் அதிகாரங்கள் பற்றி சிந்திக்கவே முடியாது என கூறியிருக்கிறார்.
எனவே அண்ணன் வழங்க முடியாது என கூறுகிறார் தம்பி வழங்க முடியும் என கூறுகிறார் இது முன்னுக்கு பின் முரணான செய்திகளாக இருக்கிறது. தேர்தலை நோக்கிய வார்த்தை பிரயோகமாக தான் நான் அதைப் பாக்கிறேன்.
போரின் போது சர்வதேச நாடுகளை நாடி தமது விடயங்களை சாதித்துகொண்டவர்கள், சர்வதேசத்திற்கு நேரடியாகவே வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள், பான் கீ மூனுடன் இணைந்து கூட்டறிக்கையை விட்டிருக்கிறார்கள்.
சர்வதேசத்துடன் சேர்ந்து ஈழ விடுதலை போராட்டத்தை இல்லாமல் செய்துவிட்டு தற்பொது மட்டும் சர்வதேசத்திடமும் இந்தியாவிடமும் ஏன் போகின்றீர்கள் என்று மஹிந்த கூறுகிறார். போர் நடந்த போது அந்த வாதத்தை அவர் கூறியிருக்க வேண்டும். இன்று தமிழர்கள் நிற்கதியான நிலையில் இருக்கும் போது இந்த கருத்தை சொல்லுவது நியாயமான அரசியல் வாதிக்கு பொருந்தாது.
சர்வதேச இராஜதந்திரிகள் இங்கு வருவது அவர்களின் நலன்களை முன்னிறுத்தியதாகதான் இருக்கும். ஆட்சி மாற்றம் இடம்பெற்ற நிலையில் சர்வதேசம் இங்கே வருகிறது என்றால் அவர்களது சுயநலன்களிற்காகவே வருகிறார்கள் என்பதே உண்மை.
மாறாக தமிழர்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் இவர்கள் செயற்படுவார்களாக இருந்தால் அது உலக அரசியலில் நியாயபூர்வமான சிந்தனையாக இருக்கும்” என்றார்