இருபதில் தமிழ் மக்களுக்கு என்ன காத்திருக்கிறது?
12 Jan,2020
2019இல் எது கிடைத்ததோ அதன் விளைவுகள் தான் 2020இல் கிடைக்கக்கூடும். 2019 இல் என்ன கிடைத்தது? கடந்த ஆண்டு ஒரு வலுச் சமநிலை மாற்றத்தோடு முடிவடைந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலவி வந்த ஒருவலுச் சமநிலை கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலோடு தலைகீழாக மாறியது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இருந்த வலுச் சமநிலை எனப்படுவது மேற்கு நாடுகளுக்கும் அதிகம் சாதகமானது. இப்போது ஏற்பட்டிருக்கும் புதிய வலுச் சமநிலை சீனாவுக்கும் ஓரளவுக்கு இந்தியாவுக்கும் சாதகமானது.
எனவே 2020இல் என்ன கிடைக்கப் போகிறது என்பது இந்த வலுச் சமநிலை மாற்றத்தின் விளைவுகள் தான். இந்த வலுச் சமநிலை மாற்றத்தின் விளைவுகள் இலங்கைத் தீவுக்கு மட்டும் உரியவை அல்ல. இந்த பிராந்தியத்துக்கு உரியவை. அதற்கும் அப்பால் இந்தோ பசுபிக் பாதுகாப்பு கட்டமைப்புக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
இந்தோ பசிபிக் பாதுகாப்பு வட்டகையைப் பொறுத்தவரை இலங்கை தீவு கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்திருக்கிறது. இது காரணமாகவே முப்பெரும் வல்லரசுகளின் இழு விசைகளுக்குள் இச்சிறிய தீவு சிக்குண்டிருக்கிறது. இந்த இழுவிசைகளை சமாளித்துக் கொண்டு புதிய ஜனாதிபதியும் அவருடைய அரசாங்கமும் எப்படி முன்னேற போகிறார்கள் என்பதில் தான் தமிழர்களுக்கான இந்த ஆண்டு பலன் தங்கியிருக்கிறது.
இந்தோ பசுபிக் பாதுகாப்பு வலைப்பின்னலை பொபாறுத்தவரை கடந்த 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன நாட்டில் மூன்றரை ஆண்டுகளாக நிலவி வந்த ஒரு வலுச் சமநிலையை குழப்ப முயற்சித்தார்.
அதில் அவர் முழு வெற்றி பெறவில்லை. எனினும் மேற்கு நாடுகளுக்கு சாதகமான அந்த வலுச் சமநிலையானது தளம்பத் தொடங்கியது. அங்கிருந்து தொடங்கி தளம்பித் தளம்பி வந்து முடிவில் கடந்த ஆண்டு இறுதியில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் அந்த வலுச் சமநிலை தலைகீழாக மாறிவிட்டது.
இவ்வாறு கடந்த 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மைத்திரிபால சிறிசேன மேற்கு நாடுகளுக்கு சாதகமாக இலங்கைத்தீவில் நிலவிவந்த வலுச் சமநிலையைக் குழப்பிய அதே காலப்பகுதியில் மாலைதீவில் ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதுவும் தலைகீழ் மாற்றம்தான். அங்கே அதுவரையிலும் ஆட்சி புரிந்த சீனாவுக்கு நெருக்கமான அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் நெருக்கமான ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
இப்படியாக கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் முத்துமாலை வியூகத்தில் இருந்து ஒரு முத்து கழண்டு போய் இந்தியாவை நோக்கி வந்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் மற்றொரு முத்து மேற்கு நாடுகளின் மடிக்குள் இருந்து சீனாவை நோக்கி வந்தது. இந்த மாற்றங்கள் கிட்டத்தட்ட கடந்த 14 மாத காலப்பகுதிக்குள் நிகழ்ந்தன.
எனவே அமெரிக்காவின் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் அதாவது இந்தோ பசிபிக் மூலோபாய நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் மாலைதீவுகளில் ஏற்பட்டிருப்பது அவர்களுக்கு சாதகமான மாற்றம். ஆனால் இலங்கைத் தீவில் ஏற்பட்டிருப்பது அவர்களுக்கு பாதகமான மாற்றம். இம்மாற்றம் இன்னமும் முழுமையடையவில்லை.
வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்தான் இந்த மாற்றம் அதன் முழு வடிவத்தை அடையும். ஏனெனில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும் கூட 19ஆவது திருத்தம் அவரை முழுச் சுதந்திரத்தோடு செயல்பட விடவில்லை. 19 ஆவது திருத்தத்தை அவர் அகற்ற வேண்டும். அப்பொழுதுதான் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றி முழு வெற்றியாக மாறும். அவ்வாறு 19ஆவது திருத்தத்தை அகற்றுவது என்றால் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எப்படி பெறுவது?
எப்படி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்களோ அதே வழிமுறையை நாடாளுமன்ற தேர்தலிலும் கடைப்பிடிக்கலாம்.
அது என்ன வழிமுறை ?
தனிச்சிங்கள பௌத்த வாக்குகளையும் சிங்கள கிறிஸ்தவ வாக்குகளையும் இலக்கு வைத்து ஓர் இன அலையை உற்பத்தி செய்வது. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அவர்கள் பெறக்கூடும்.
அவ்வாறு ஓர் இன அலையை உற்பத்தி செய்வது என்று சொன்னால் அதற்கு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாரத்துக்கு எதிரிகள் தேவை. அதற்குரிய அதிகபட்ச வாய்ப்புக்களை வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் ஜெனிவா கூட்டத் தொடர் அவர்களுக்கு வழங்கக் கூடும். ஜெனிவா கூட்டத்தொடர் எனப்படுவது ராஜபக்ஷ அரசாங்கத்தை பொறுத்தவரை அதிகம் உணர்ச்சி கரமானதாகவும் தீர்மானகரமானதாகவும் அமையக்கூடும். ஏனெனில் ராஜபக்ச சகோதரர்கள் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை எதிர்க்கிறார்கள். அதை மாற்ற வேண்டும் என்று கேட்கிறார்கள். அவ்வாறு மாற்றுவது என்று சொன்னால் நடைமுறையில் அவர்கள் மேற்கு நாடுகளை வெற்றிகரமாக கையாள வேண்டியிருக்கும்.
ஆனால் ஜெனிவா தீர்மானத்தின் மூலம் இலங்கைத் தீவில் தமது பிடியை உறுதிப்படுத்த விழையும் ஐநாவும் மேற்கு நாடுகளும் இதுவிடயத்தில் ராஜபக்சக்களோடு ஒத்துழைப்பார்களா? அப்படி ஒத்துழைக்காவிட்டால் அதன் விளைவுகள் உடனடிக்கு ராஜபக்ஷக்களுக்கு தேர்தல் களத்தை பொறுத்தவரை சாதகமானது. அதை வைத்து ஓர் இனமான அலையை அவர்கள் உற்பத்தி செய்யலாம். வெள்ளைக்கார நாடுகளும் புலம்பெயர்ந்து வாழும் புலிகள் இயக்கமும் இணைந்து தாங்கள் பெற்றுக் கொடுத்த போர் வெற்றிகளைத் தோல்விகள் ஆக மாற்ற முற்படுவதாகக் கூறி தென்னிலங்கையில் ஓர் இன அலையை உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முயற்சிப்பார்கள்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால்தான் அவர்களுடைய வெற்றி அதன் முழுமையான வடிவத்தை அடையும். அதன் பின்னர்தான் அவர்களுடைய வெளியுறவுக் கொள்கை தொடர்பாகவும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும் முழுமையான தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கும்.
இப்பொழுது அவர்களுக்குத் தேவை மூன்றிலிரண்டு பெரும்பான்மை. அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று எப்படி வெற்றியை முழுமைப்படுத்தலாம் என்றுதான் அவர்கள் சிந்திப்பார்கள். அதை நோக்கியே அவர்களுடைய வெளியுறவுக் கொள்கையும் உள்நாட்டுக் கொள்கைகளும் அமையும். ஆனால் அவ்வாறு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அவர்கள் பெற்று விடடால் அதன்பின் அவர்கள் தங்களை சுதாகரித்துக் கொள்வார்களா? அல்லது அந்த வெற்றியின் கைதிகளாக மாறி மேற்கு மேற்கு நாடுகளோடும் இந்தியாவோடும் முரண்படும் ஓர் அரசியலை முன்னெடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அவர்கள் மேற்கு நாடுகளோடு முரண்பட்டால் ஐநா தீர்மானத்தை முன்வைத்து மேற்கு நாடுகள் அவர்களுக்கு நெருக்கடிகளை கொடுக்கக் கூடும். அதோடு தமிழ் மக்களையும் தங்களுக்கு சாதகமாக கையாளக் கூடும்.
இப்போதைக்கு அவர்கள் இந்தியாவை அரவணைக்கப் பார்க்கிறார்கள். கடந்த முறை இந்தியாவை போதிய அளவுக்கு அரவணைக்க தவறியதால்தான் 2015-ல் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக ராஜபக்ச சகோதரர்கள் கூறிவருகிறார்கள். எனவே இம்முறை அவர்கள் இந்தியாவின் விடயத்தில் எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொள்வதாகவே தெரிகிறது. மேலும் இந்தியாவும் ராஜபக்சக்கள் காட்டும் சாதகமான சமிக்ப் பற்றிப் பிடிப்பதாகவே தெரிகிறது.
முதலில் இந்தியா. சீனா இதயத்தில் என்ற அடிப்படையிலேயே கோட்டாபயவின் அணுகுமுறை இதுவரையிலும் அமைந்திருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் பெறக்கூடிய வெற்றியின் பின் அது அவ்வாறு அமையுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு போர் வெற்றிக்குப் பின் ராஜபக்ச சகோதரர்கள் தமது வெளியுறவுக் கொள்கையில் பிராந்திய யதார்த்தங்களை உள்வாங்கி சமயோசிதமாக நடந்துகொள்ள தவறினார்கள். அதே தவறை அவர்கள் இந்த முறையும் விடுவார்களா?
இது விடயத்தில் ராஜபக்ச சகோதரர்களை முழுமையாக பகைக்கும் ஒரு நிலைக்கு இந்தியாவும் போகாது என்றே தெரிகிறது. ஏனெனில் கோட்டாபயவை பகை நிலைக்கு தள்ளினால் அவர் சீனாவை நோக்கி முழுமையாக சென்றுவிடுவார். இந்த பிராந்தியத்தில் அவ்வாறான ஒரு முரண் நிலையை தோற்றுவிக்க இந்தியாவும் விரும்பாது மேற்கு நாடுகளும் விரும்பாது. இது ராஜபக்ச சகோதரர்களுக்கு உள்ள ஒரு பலமும் பிடியும் ஆகும். அவர்கள் சீனாவை நோக்கி போய் விடுவார்கள் என்று இந்தியாவும் மேற்கு நாடுகளும் கரிசனை கொள்வதே ராஜபக்ச சகோதரர்களின் பேரம் பேசும் பலமாகக் காணப்படுகிறது.
2009 லிருந்து 2015 வரையிலும் இதே நிலைமை தான் காணப்பட்டது. அக்காலகட்டத்தில் தமிழ் பிரதிநிதிகளையும் சிவில் சமூகங்களையும் சந்திக்கும் பெரும்பாலான எல்லா மேற்கு நாட்டு தூதுவர்களும் இதைத்தான் அவர்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். நாங்கள் இறுக்கிப் பிடித்தால் அவர்கள் மேலும் அதிகமாக சீனாவை நோக்கி சென்று விடுவார்கள் என்று சொன்னார்கள். இனிமேலும் அப்படித்தான் சொல்லப் போகிறார்களா?
இக்கட்டுரையில் மேலே கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் மார்ச் மாதத்தின் பின் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர்தான் துலக்கமாகக் கிடைக்கும். அந்த விடைகளை வைத்துதான் தமிழ் மக்களுக்கு இந்த ஆண்டு எதைத் தரப்போகிறது என்று கூறமுடியும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக தமிழ் மக்கள் ஒரு திரடச்சியாகி தமது எதிர்ப்பை எவ்வாறு வெளிப்படுத்த போகிறார்கள் என்பதும் இந்த ஆண்டில் தமிழ் மக்களின் பலனைத் தீர்மானிக்கும்