வடக்கு கிழக்கில் திறந்தவெளிச் சிறைச்சாலை அகதிகளாக தமிழ் மக்கள் – ஸ்ரீதரன்
29 Dec,2019
வடக்கு கிழக்குப் பகுதிகளிலே திறந்த வெளிச்சிறைச்சாலை அகதிகளாக தமிழ் மக்கள் இப்பொது உள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், “இலங்கை தமிழரசுக் கட்சி 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவில்லை. நாம் அடுத்த நகர்வை எவ்வாறு செய்யப்போகிறோம் என்பதையே சிந்திக்கிறோம். இன்று நாம் வடக்கு கிழக்கில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அகதிகளாக்கப்பட்டுள்ளோம்.
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்று, அநுராதபுரத்தில் உரையாற்றியபோது இனப்பிரச்சினைக்கான எந்தவொரு கருத்தையும் அவரால் சொல்ல முடியவில்லை. அத்துடன் ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தல் பற்றித் தெரிவிக்கப்படவில்லை.
வெறுமனே அபிவிருத்திக் கோசங்களோடு நிற்கின்றவர்களை அல்லது தாங்கள் எதுவுமில்லை சமமாக நிற்கின்றோம் என்று சொல்லிவிட்டு இப்போது புதிய அரசாங்கம் வந்த பிற்பாடு, அவருக்குப் பின்னாலே ஒவ்வொரு தலைமைகளை எடுத்துக்கொண்டு நாங்கள் அபிவிருத்திதான் செய்யப்போகின்றோம் என்று நினைப்பவர்களிடம் நாங்கள் கேட்கின்றோம், இந்த மண்ணிலே, எங்களுக்கான அடிப்படை உரிமைக்காகவும் நாம் போராடுவோம் என்று.
இதேவைளை, நாம் இந்த மண்ணில் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் கூறிக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.