இன்று 15-வது சுனாமி நினைவு தினம்
29 Dec,2019
எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் ஏதோ ஒரு இடத்தில் சுனாமி பதித்து சென்ற கோரத்தடம் அழியாத கோலங்களாக அப்படியே காட்சிப் பொருளாக இருக்கின்றன.
“அழகு என்றைக்கும் ஆபத்து” என்று சொல்லப்படுவது உண்டு. அதை ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையில் வெவ்வேறு நேரங்களில் உணர்ந்திருக்கலாம். ஆனால், ஒரே நாளில் உணர்த்தி அனைவரின் மனதையும் உறையச் செய்த ஆண்டு 2004. அதுவரை கடல் அலையின் அழகை ரசித்து வந்த மக்களுக்கு, அலையும் ஒரு நாள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாள் டிசம்பர் 26. அன்று அதிகாலை 1 மணியளவில் இந்தோனேசியா சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பூமிக்கு கீழே 1,600 கி.மீ. நீளத்திற்கு நிலத்தட்டுகள் சரிந்தன. இதனால், இந்தியப் பெருங்கடலில் ராட்சத அலைகள் எழுந்து, கடற்கரையோர பகுதிகளை கபளீகரம் செய்ய, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக சீறிப்பாய்ந்து வந்தன. அடுத்த 3 மணி நேரத்தில், கடலோர பகுதிகளை துவம்சம் செய்தது.
இந்த கோர தாண்டவத்தில் சிக்கி இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா, மாலத்தீவு, மியான்மர் உள்பட 11 நாடுகளை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் மாண்டு போனார்கள். இந்தியாவை பொறுத்தவரை, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக, கிழக்கு மாகாணம், அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டது. இதன் அஞ்சலி நிகழ்வுகள், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில், இன்று (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
திருச்செந்தூர் சுனாமி நினைவுத்தூபியில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டு, இப்பிரதேசத்தில் உயிரிழந்த 243 பேரின் திருவுருவப்படங்களுக்கு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அம்பாறை – திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உயிர்நீத்த 598 பேருக்காக, திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தால், திருக்கோவில் பொது விளையாட்டு மைதானத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
திருகோணமலை, மூதூர் கிழக்கு – கட்டைபறிச்சான் விபுலானந்தர் வித்தியாலயத்திலும், நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
சுனாமியில் பலியான பாலசுகுமார் அனாமிகாவின் நினைவாகப் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,சமூக ஆர்வலர்கள்,பொது மககள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.