இறந்தவர்களை நினைவுக் கூர்ந்தமைக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தேன் – சிவாஜி
29 Dec,2019
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் தமது ஒரே நிலைப்பாடாகும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொண்டமைக்காக, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க, இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு வாக்குமூலம் வழங்க அவர் சென்றிருந்தார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் மண்ணில் இறந்தவர்களை, கடந்த மே 12ஆம் திகதி நினைவு கூர்ந்தமைக்காக என்னை இன்று விசாரணைக்கு அழைத்திருந்தார்கள்.
இறந்தவர்களை நினைவுக்கூர்ந்தமைக்குத்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தோம்.
அத்தோடு, விக்னேஸ்வரன் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆனால், அவர் தேவையில்லாத எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதுதான் உண்மையாகும். இங்கிருந்து வரும் கருத்துக்களுக்குத்தான் அவர் பதில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் எனில், இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படவேண்டும்.
தமிழ்- முஸ்லிம்- சிங்கள மக்கள் என அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழவே விரும்புகிறார்கள்.
இதற்கு ஒரு தரப்பு மட்டும் ஒத்துழைத்துப் போதாது என்பதுதான் எமது நிலைப்பாடாக இருக்கிறது” என மேலும் தெரிவித்தார்.