கோட்டா தலைமையிலான அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது – வேலுகுமார்
22 Dec,2019
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது என்றும் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பதே அதன் கொள்கையாக மாறியுள்ளது என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
கண்டியிலுள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலருடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனும் பாலும் பாய்ந்தோடும் என்ற தொனியில் ராஜபக்ஷக்களும் அவர்களின் சகாக்களும் பேசினர்.
எனினும் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் கொள்கைகளை மாற்றிக்கொண்டுள்ளனர். குறிப்பாக எம்.சி.சி. உடன்படிக்கை நிராகரிக்கப்படாது என அறிவித்துள்ளதுடன், அது நாட்டுக்கு நன்மை பயக்ககூடியது எனவும் விளக்கமளித்து வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்திலும் நெகிழ்வுபோக்கை பின்பற்ற தொடங்கியுள்ளனர். எனவே, இந்த அரசாங்கத்திடம் தூரநோக்கு சிந்தனையும் உறுதியான கொள்கையும் இல்லை என்பது தற்போதே உறுதியாகிவிட்டது” என மேலும் தெரிவித்துள்ளார்.