பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்குக்கு வெளியிலும் கூட்டமைப்பு போட்டியிடும்: சம்பந்தன்
15 Dec,2019
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது. ஆகவே இம்முறை வடக்கு கிழக்குக்கு அப்பாலும் போட்டியிடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைமைகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே விரைவில் இது குறித்தும் நாம் நடவடிக்கைகளை எடுப்போம் .
மேலும் மலையக மக்களின் பிரதிநிதிகளுக்கும் நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், எங்களது ஒத்துழைப்புக் காரணமாக அவர்கள் பலவீனமாகக் கூடாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா உருவாக்குவதற்கு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதே காரணம்.
எனவே மலையகத்துக்கும் வடக்குக்குமான தொடர்பு ஆழமானது. இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைபுக்குள் எந்தவிமானப் பிளவுகளும் இல்லை என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு மற்றும் பங்காளிக்கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இம்முறை தேர்தல் நகர்வுகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வியூகங்கள் எவ்வாறு உள்ளதென வினவியமைக்கு அவர் இதனைக் கூறினார்.