தமிழ் மக்களை தீர்வல்லாத ஒரு தீர்வுக்குள் பெட்டி கட்டும் ஒரு சூழ்ச்சியே 13 ஆவது திருத்தம்
09 Dec,2019
கோட்டாபய ராஜபக்ஷ பதின்மூன்றாவது திருத்தத்தை தாண்ட மாட்டார் என்று தெரிகிறது. பொதுவாக ராஜபக்ஷக்கள் 13வது திருத்தத்துக்கு அப்பால் சிந்தித்ததில்லை. அதற்கு யுத்த வெற்றி வாதத்தில் இடமில்லை.
மூத்த ராஜபக்ஷ ஆகிய மஹிந்த 13 பிளஸ் என்று ஒரு சொல்லை பிரயோகித்தார். ஆனால் நடைமுறையில் அவர் 13 பதின்மூன்றாவது திருத்தத்தையே முழுமையாக பிரயோகிக்க தயாராக இருக்கவில்லை. கூட்டமைப்புடனான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது அவர் தங்களை வேண்டும் என்று அலைக்கழித்ததாகவும் விசுவாசமாக அந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார்.
மஹிந்த மட்டுமல்ல அவருக்கு முன் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் 13ஆவது திருத்தத்தில் இருப்பவற்றை முழுமையாக அமல்படுத்த தயாராக இருக்கவில்லை. ஒப்பீட்டளவில் பரவாயில்லாத ஒரு தீர்வு என்று ஒரு பகுதியினல் பார்க்கப்படும் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வை முன்வைத்த சந்திரிக்கா குமாரதுங்கவும் பதில் மூன்றில் இருப்பவற்றை முழுமையாக அமல்படுத்த தயாராக இருக்கவில்லை.
13ஆவது திருத்தத்தில் தொங்குவது என்பது சிங்களத் தலைவர்களை பொறுத்தவரை இந்தியாவையும் பங்காளியாக்கி தமிழ் மக்களை தீர்வல்லாத ஒரு தீர்வுக்குள் பெட்டி கட்டும் ஒரு சூழ்ச்சிதான். பதின்மூன்றாவது திருத்தம் எனப்படுவது இந்தியாவின் குழந்தை எனவே அதை ஒரு தீர்வாக ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்தியாவை தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்படுத்தலாம். அல்லது தமிழ் மக்களை இந்தியாவோடு மோத விடலாம்.
ஆனால் இது விடயத்திலும் கூட13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இதுவரையிலும் இருந்த எந்த ஒரு ஜனாதிபதியும் தயாராக இருக்கவில்லை. அதில் காணப்படும் காணி உரிமைகளையும் பொலீஸ் அதிகாரங்களையும் தருவதற்கு யாருமே இதுவரை தயாராக இருந்ததில்லை. மாறாக அதிலிருக்கும் அதிகாரங்களை எப்படி குறைக்கலாம் என்று தான் பெரும்பாலான ஜனாதிபதிகள் சிந்தித்தார்கள்.
பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்றுக்கொண்ட தமிழ் தலைவர்களில் ஒருவராகிய வரதராஜ பெருமாள் அத் திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் இந்திய மாநிலம் ஒன்றுகுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டிருக்கின்றன என்று திரும்பத் திரும்ப கூறுகிறார்.
வரதராஜ பெருமாள் இப்பொழுது கோட்டாபயவுடன் நிற்கிறார். ஆனால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த சொல்லி கோட்டாபய மீது செல்வாக்கு செலுத்த அவரால் முடியவில்லை.
எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வாக பதின்மூன்றாவது திருத்தத்தை முன்வைப்பது என்பது சிங்களத் தலைவர்களை பொருத்தவரை தமிழ் மக்களை ஒடுக்கும் உத்திகளில் ஒன்று தான். யுத்தத்தை வெற்றி கொண்டபின் ராஜபக்சக்கள் அதைத்தான் செய்தார்கள். இப்பொழுது கோட்டாபயவும் அதைத்தான் செய்யப்போகிறார்.
ஆனால் அவர் வெளிப்படையாக கூறுகிறார் மாகாணசக்குள்ள அதிகாரங்களில் காணி அதிகாரத்தையும் பொலீஸ் அதிகாரத்தையும் தரப்போவதில்லை என்று. அதையும் அவர் இந்திய மண்ணில் வைத்து கூறுகிறார். இந்திய பிரதமர் மோடி கோட்டாபயவை அருகில் வைத்துக்கொண்டு 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறிய பின்னரும் கோட்டாபய அதை முழுமையாக அமல்படுத்த மாட்டேன் என்று கூறுகிறார்.
அதாவது பதின் மூன்று சக அல்ல.சய. அப்படி கூறுவதற்கான துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது?
முதலாவது காரணம். இந்தியா தன்னுடன் நிற்கும் என்று அவர் நம்புகிறார். ஏனெனில் தனது வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு முதலிடம் என்று அவர் தெளிவாக காட்டி இருக்கிறார். சீனாவோடு செய்துகொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய அம்பாந்தோட்டை உடன்படிக்கையை ரத்து செய்யப்போவதாக அல்லது மீளாய்வு செய்யப்போவதாக அவர் கூறுகிறார்.
அவருக்கு ஒன்று தெளிவாக தெரியும். புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான விவகாரம் இனப்பிரச்சினை அல்ல. மாறாக சீன மயமாதல் தான். அது விடயத்தில் இந்தியாவை திருப்தி படுத்தினால் சரி. அதோடு பதின்மூன்றாவது திருத்தத்தை பற்றிக்க்கொண்டால் தீர்வு விடயத்தில் இந்தியாவை பங்காளியாக்கலாம்.
அவர் பதவிக்கு வர முன்னரே சீனாவின் ஆள் என்று வர்ணிக்கப்பட்டவர். எனவே ஒரு சீனாவின் ஆள் இந்தியாவுக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் போது அங்கே அவருக்கு பேரம் அதிகம். அதனால்தான் இந்தியாவிடமிருந்து 480 மில்லியன் டொலர் நிதி உதவியை பெற்ற பின்னரும் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இது முதலாவது காரணம்.
இரண்டாவது காரணம், தமிழ் மக்கள் மத்தியில் மாகாணசபையை விட கூடுதலான ஒரு தீர்வை கேட்கும் விதத்தில் ஐக்கியப்பட்ட எதிர்ப்பு எதுவும் கிடையாது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதப் போராட்டம் நசுக்கப்படட பின் தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு கல்லைக்கூட எடுத்து எறியவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே தொடர் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
அது தவிர இடைக்கிடை நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் எழுக தமிழ்கள் கடையடைப்புக்கள் இவற்றுக்கும் அப்பால் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் எதிர்ப்பு எனப்படுவது கூர்மையான விதத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. அவ்வாறு வெளிப்படுத்தவல்ல அரசியல் இயக்கங்களோ செயற்பாட்டு இயக்கங்களோ அல்லது கட்சிகளோ தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் இருப்பவை எல்லாம் தேர்தல் மையக் கட்சிகள் தான். தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த அவர்களுக்கு உள்ள ஒரே வழி தேர்தல் வழிதான். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அப்படித்தான் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை ஓர் அலையாக திரண்டு சென்று காட்டினார்கள்.
அதிலும்கூட தமிழ் வாக்குகள் இன்றி தன்னால் தனிச் சிங்கள வாக்குகளால் வெற்றி பெறமுடியும் என்று கோட்டாபய நம்புகிறார். வாக்களிப்பு கணக்கின்படி அது பிழை என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் தமிழ் முஸ்லீம் வாக்குகள் அவருக்கு விழுந்திருக்கின்றன. அவருக்கு விழுந்த மொத்த வாக்குகளில் இந்த மூன்று லட்சத்தையும் கழித்தால் அவருக்கு 50 வீதத்திற்கு மேலான வாக்கு கிடைத்திருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த எளிமையான கணிதத்தை அவர் பொருட்படுத்தவில்லை.
தனிச் சிங்கள வாக்குகளால் வென்றிருப்பதாக காட்டப் பார்க்கிறார். எனவே தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்ட கிடைத்த ஒரே ஒரு ஒரு வழியிலும் கூட தன்னை அசைக்க முடியாது என்று அவர் நம்புகிறார். எனவே தமிழ்க் எதிர்ப்பை குறித்து அவர் அச்சம் அடையவில்லை. ஆயிரம் நாட்களுக்கு மேலாக வீதியோரங்களில் போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவர் அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. எனவே துணிந்து கூறுகிறார் இதுதான் தருவேன் தரமாட்டேன் என்று. இது இரண்டாவது காரணம்.
மூன்றாவது காரணம். அவருடைய குடும்பத்தில் ஒரு பாதி இப்பொழுதும் அமெரிக்கர்கள். அதாவது அமெரிக்காவின் பிடிக்குள் தான் அவருடைய ஒரு பகுதி குடும்ப உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். எனவே அவரை அமெரிக்கா இப்பொழுதும் கையாள முடியும். ஆனால் அவ்வாறு தனக்கு எதிராக அமெரிக்கா பெரிய அளவில் நகர்வுகள் எதையும் எடுக்காது என்று அவர் நம்புகிறார்.
கடந்த பத்தாண்டுகளில் ஐநா தீர்மானங்கள் சிலவற்றை அமெரிக்கா முன்னகர்த்தியது. ஆனால் மெய்யாகவே இலங்கை அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியிருந்தால் தனது இரட்டை பிரஜாவுரிமை பெற்ற கோட்டாபயவைதான் முதலில் விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே தன் விடையத்தில் அமெரிக்கா எதுவரை பிடியை இறுக்கும் என்பது தொடர்பில் அவருக்கு ஒரு புரிந்துணர்வு உண்டு. மேலும் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்குவதில் அமெரிக்கா தன்னை எவ்வாறு அணுகியது என்பது தொடர்பிலும் அவருக்கு ஒரு புரிந்துணர்வு உண்டு. இந்த அடிப்படையில் தான் அவர் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளைப் பார்ப்பார்.
இதில் அவருக்கு நெருக்கடியான விவகாரம் ஐநாவின் 30/1 தீர்மானம்தான். அதிலிருந்து தப்புவது அவருக்கு இப்பொழுதுள்ள ஒரே பெரிய சவால். இதை இன்னொரு விதமாக சொன்னால் தீர்மானத்தை நோக்கி மேற்கத்திய நாடுகளை உந்தித் தள்ளிய தமிழ் டயஸ்போராவை அவர் கையாள வேண்டியிருக்கும். அவர் அதை ஏற்கனவே தொடங்கி விட்டார். அவருக்கு முன்னரே ரணில் அதை செய்து விட்டார். மஹிந்தவும் செய்தார்.
தமிழ் டயஸ்போராவில் உள்ள அமைப்புகளில் தங்களை நோக்கி வரக்கூடிய அமைப்புகளையும் முதலீட்டாளர்களையும் கவர்ந்திழுத்து டயஸ்பொறாவை எப்படி பலவீனப்படுத்தலாம் என்று அவர்கள் எப்பொழுதோ சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்.
எனவே இது விடயத்தில் டயஸ்பொறாவை கையாள்வது என்ற முடிவுக்கு அவர்கள் வருவார்கள். எனினும் நிலைமாறுகால நீதியை முழுமையாக ஸ்தாபிப்பதற்கு அவர்களால் முடியாது. அதில் அவர்களுக்கு அடிப்படையான வரையறைகள் உண்டு.
நிலைமாறு கால நீதியின்படி அவர்கள் யாப்பைத் திருத்த வேண்டும். அதாவது நிலைமாறுகால நீதியின் ஒரு பகுதியான மீள நிகழாமை என்ற பிரிவுக்குள் அது வருகிறது. இனப்பிரச்சினை தீர்வுக்கான ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய ஒரு புதிய யாப்பை உருவாக்க வேண்டும். பதின்மூன்றாவது திருத்தத்தையே முழுமையாக அமுல் படுத்த மாட்டேன் என்று கூறும் ஒருவர் அதை எப்படி செய்வது?
அவருக்கு சிக்கலாக இருக்கும் ஓர் இடம் இதுதான். நிலைமாறுகால நீதி. அது அனைத்துலக சமூகத்தோடு இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட ஓர் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை தான் இப்பொழுது ஈழத்தமிழர்களுக்குள்ள ஒரு பிடி.