இலங்கையில் கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், நாட்டின் அரசியல் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையில் 9 மாகாணங்கள் காணப்படுகின்ற நிலையில், குறித்த 9 மாகாணங்களின் ஆட்சி காலமும் நிறைவடைந்திருந்தன.
01.வடக்கு மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம்.
02.கிழக்கு மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள்.
03.மத்திய மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம்.
04.ஊவா மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 மாதங்கள்.
05.சப்ரகமுவ மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள்.
06.வடமத்திய மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள்.
07.வடமேல் மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம்.
08.தென் மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 8 மாதங்கள்
09.மேல் மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 8 மாதங்கள்.
மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அதன் அதிகாரங்கள் ஆளுநர் வசமாவது வழக்கமான விடயமாகும்.
இந்த நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில், மாகாண சபைகளின் அதிகாரங்கள் வைத்திருந்த அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை அடுத்து, அனைத்து ஆளுநர்களும் உடனடியாக பதவி விலகியிருந்தனர்.
இவ்வாறு பதவி விலகிய ஆளுநர்களுக்கு பதிலான 8 மாகாண சபைங்களுக்கான ஆளுநர் நியமனங்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டிருந்தது.
01.மேல் மாகாணம் - டொக்டர் சீதா அரபேபொல
02.மத்திய மாகாணம் - லலித் யு கமகே
03.ஊவா மாகாணம் - ராஜா கொல்லூரே
04.தென் மாகாணம் - டாக்டர் விலி கமகே
05.வடமேல் மாகாண - ஏ.ஜே.எம் முஸம்மில்
06.சப்ரகமுவ மாகாணம் - டிகிரி கொப்பேகடுவ
07.கிழக்கு மாகாணம் - அனுராதா அரம்பே
08.வடமத்திய மாகாணம் - திஸ்ஸ விதாரண
இலங்கையின் 9 மாகாணங்கள் இருக்கின்ற நிலையில், தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றது.
இந்தியாவினால் 1987ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன - ராஜீவ் காந்தி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்ட 13ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழர்களை முன்னிலைப்படுத்தியே மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.
1987ஆம் ஆண்டு மாகாண சபை உருவாக்கப்படும் சந்தர்ப்பத்தில் 8 ஆளுநர்கள் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை அரசியலமைப்பின் 154(அ) சரத்தின் பிரகாரம், மாகாண சபைகள் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் ஜனாதிபதியினால் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் நன்மதிப்பை வென்ற ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுகின்றமை வழமையான விடயமாக காணப்பட்டது.
ஆரம்பகாலத்தில் வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்கள் ஒன்றிணைந்திருந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக அந்த மாகாணங்கள் உரிய முறையில் இயங்காதிருந்தது.
இதையடுத்து, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த 2006ஆம் ஆண்டு காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவொன்றின் ஊடாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, இரண்டு மாகாண சபைகளாக பெயரிடப்பட்டன.
இந்த நிலையில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதலாவதாகவும், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இரண்டாவதாகவும் நடத்தப்பட்டு, முதலமைச்சரின் கீழ் ஆட்சி நடத்தப்பட்டது.
மாகாண சபைகள் கலைக்கப்பட்ட நிலையில், மாகாணத்திற்கான ஆட்சி பொறுப்பு ஆளுநர்கள் வசமாகியிருந்த போதிலும், புதிய அரசாங்கம் புதிய ஆளுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில், தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு மாகாணத்திற்கு இதுவரை ஆளுநர் ஒருவரை நியமித்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது,
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வட மாகாணத்திற்கான ஆளுநராக நியமிக்கப்படுவார் என முதலில் பேச்சுக்கள் அடிப்பட்டன.
எனினும், இறுதி வரை அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான ஆர்.சிவராஜைவை தொடர்புக் கொண்டு பிபிசி தமிழ் வினவியது.
''13ஆவது திருத்தத்தின் அமுலாக்கம், அதிகார பகிர்வு ஆகியவற்றின் சில விடயங்கள் நடைமுறை சாத்தியமல்லவென ஜனாதிபதி இந்தியாவில் கூறியிருந்தார். இதன்படி, மாகாண சபை இல்லாத நிலையில், வடக்கில் நியமிக்கப்படும் ஆளுநர் தன்னுடன் ஒத்துப்போக்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி விரும்புகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. எனவே, தனது 13ஆவது திருத்த அதிகார பகிர்வு யோசனையுடன் ஒத்து போகக்கூடிய ஒருவரையே அவர் வடக்கின் ஆளுநராக தெரிவு செய்வார் எனவும், அதற்காகவே அவர் நேரம் எடுக்கின்றார் எனவும் உணர முடிகின்றது. பெரும்பாலும் சிங்களவர் ஒருவரை வடக்கின் ஆளுநராக நியமிக்கும் சந்தர்ப்பம் கூடகாணப்படுகின்றது" என ஆர்.சிவராஜா தெரிவித்தார்.
இலங்கை: 8 புதிய ஆளுநர்கள் நியமனம் - இருவர் பெண்கள்
கோட்டாபய ராஜபக்ஷ 10 நாளில் சாதித்தவை என்ன? இலங்கை அரசு என்ன சொல்கிறது?
வடக்கின் ஆளுநராக இராணுவ அதிகாரி எவரேனும் நியமிக்கப்படுவார்களாக இருந்தால், தமிழ் மக்கள் இராணுவ கட்டமைப்பிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற ஒரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுலாக்க மாட்டேன் என கூறியிருந்ததை அவர் இதன்போது நினைவூட்டினார்.
13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக காணப்படுகின்ற போதிலும், அதனை நிறைவேற்ற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிலேயே வைத்து, இந்தியாவிற்கு தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த கருத்து தொடர்பில் இந்திய அரசாங்கம் இதுவரை எந்தவிதமான அபிப்ராயத்தையும் வெளிப்படுத்தவில்லை என வீ.தனபாலசிங்கம் கூறினார்.
இந்த நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆளுநர் நியமனம்
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன முதல் பல அரசத் தலைவர்கள் வட மாகாணத்திற்கு ஆளுநர்களாக பெரும்பாலும் இராணுவ அதிகாரிகளையே நியமித்திருந்ததாக சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
வட மாகாணத்திற்கு இராணுவ அதிகாரிகளை ஆளுநர்களாக நியமித்ததன் ஊடாக, தமிழ் மக்களை இராணுவத்தை கொண்டே ஆள்கின்றோம் என்ற செய்தியை வெளிப்படுத்தியதாகவே கருத முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ராணுவ நிர்வாகத்தின் கீழேயே தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்ற செய்தியையே அந்த செயற்பாடு வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, புதிய ஜனாதிபதி இராணுவ பின்புலத்தை கொண்ட ஒருவர் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க தலைமைத்துவம் வழங்கிய ஒருவர் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
வட மாகாணத்திற்கு இராணுவ அதிகாரியொருவரை நியமிக்காது, சிவில் அதிகாரியொருவரை நியமிப்பது சிறந்ததாக அமையும் என கூறுகின்றார்.
வடக்கிற்கு நியமிக்கப்படும் ஆளுநர் தமிழராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என கூறிய வீ.தனபாலசிங்கம், பொதுமக்களுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி நியமிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ராணுவ அதிகாரி ஆளுநராக நியமிக்கப்படும் பட்சத்தில், மீண்டும் இராணுவ கட்டமைப்பிற்குள்ளேயே தாம் இருக்கின்றோம் என்ற உணர்வை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, அந்த நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கக்கூடிய ஒருவர் வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் குறிப்பிடுகின்றார்.
13அவது திருத்தத்தை அமுல்படுத்த மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள பின்னணியில், அதிகார பகிர்வு தொடர்பில் அதிகளவில் பேசப்படும் வட மாகாணத்திற்கு இன்னும் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்ந்தும் கேள்விகளை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.