டியர் பிரியங்க பெர்னான்டோ வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
06 Dec,2019
பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுக்கும்’ சைகையை காண்பித்து அச்சுறுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கின் தீர்ப்பே இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவருக்கு 2500 பவுண்ட்ஸ் அபராதம் விதிப்பதாக வெஸ்ட்மின்ஸ்ரர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்ரர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் பிரிகேடியரைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதிமன்ற அலுவலக சபைக்கு இடையில் ஏற்பட்ட தாமதப் பிரச்சினை காரணமாக அது நீக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வெஸ்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றை முற்றுகையிட்டு நாடுகடந்த தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது