இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்; 450 மில்லியன் டாலர் நிதி!’ -கோத்தபய சந்திப்பில் அறிவித்த மோடி
29 Nov,2019
இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ஷே, மூன்றுநாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் மோடியும் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து, குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார் கோத்தபய ராஜபக்ஷே..
இதையடுத்து, டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கோத்தபய, “ஒரு நாட்டின் அதிபராக என்மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தியா, இலங்கைக்கு இடையே வரலாற்றுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நீண்ட நாள் நட்பு உள்ளது.
நான் அதிபராக இருக்கும் காலகட்டத்தில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான உறவை மேம்படுத்த விரும்புகிறேன். பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, இலங்கையின் வளர்ச்சிக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியளித்து உதவுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதில், இலங்கையின் பாதுகாப்புக்கு மட்டும் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்பின்னர், மோடியும் கோத்தபயவும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்