இலங்கையில் கோட்டாபய பதவியேற்றவுடன் தமிழர் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்களா?
24 Nov,2019
இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வரும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற நிலையில், அவரது சகோதரர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டது தமிழர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்ட வர்த்தமானி என்ன?
அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆயுதம் ஏந்திய முப்படை உறுப்பினர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்திற்கு அமைய இந்த உத்தரவு ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட 25 மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய முப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
திடீரென இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானதா?
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து ஒரு வார காலத்திற்குள் இவ்வாறான வர்த்தமானி வெளியாகியுள்ள நிலையில், பிரச்சினைகள் எதுவும் இல்லாத நிலையில் இத்தகைய வர்த்தமானி எதற்கு என்ற கேள்வி இலங்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகிய பின்னர், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலேயே அதிகளவில் இந்த கேள்வி எழுந்திருந்தது.
இது தொடர்பாக தெளிவுகளை பெற்றுக் கொள்வதற்காக பிபிசி தமிழ், இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவை தொடர்புக் கொண்டு வினவியது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக, மக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 260க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதை அடுத்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் மாதம் 22ம் தேதி அவசர காலச் சட்டத்தை 9 ஆண்டுகளுக்கு பின்னர் அமல்படுத்தினார்.
இந்த அவசர காலச்சட்டம் ஜனாதிபதியினால் ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி நீடிக்கப்பட்டு வந்தது.
இதன்படி, குறித்த அவசர காலச்சட்டம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நான்கு மாதங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்தது.
அதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது சரத்தின்படி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் போலீஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தும் வகையில் அப்போதைய ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.
இராணுவ சோதனை சாவடிகள் தேவையேற்படும் பகுதிகளில் மட்டும் அதனை அவ்வாறே முன்னெடுத்து செல்லவும் அந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டது.
இந்த வர்த்தமானி அறிவித்தலும் மாதந்தோறும் நீடிக்கப்பட வேண்டும் என்ற நிலையிலேயே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
புதிய ஜனாதிபதி ஒருவர் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமையே, சமூகத்தில் சர்ச்சை தோன்ற காரணம் என இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள குறித்த வர்த்தமானி அறிவித்தல், ஒவ்வொரு மாதமும் 22ஆம் தேதி ஜனாதிபதியினால் நீடிக்கப்பட வேண்டும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.