இலங்கையில் ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து
23 Nov,2019
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
:
இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அவர் அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். அதனால், தன்னுடைய சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக கோத்தபய நியமித்தார்.
2 தமிழர்கள் உள்பட 16 பேர் அடங்கிய இடைக்கால மந்திரிசபையையும் நியமித்தார். பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். மக்கள் நலனுக்காக அரசு செயல்படும் என கோத்தபயா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கோத்தபய ராஜபக்சே புதிய அவசர சட்டம் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, ஈழத்தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படையினர் பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரோந்து பணியில் ஈடுபடுவர். பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட இந்த சட்டம் நேற்று இரவு முதல் அமலுக்கு வந்ததாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.