இலங்கையில் தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள் - நடப்பது என்ன?
23 Nov,2019
நடுவில் இருந்த தமிழ் எழுத்துகள் மை பூசி அழிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான தமிழ் பேசும் சமூகம் ஆதரவளிக்காத நிலையில், பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் வாக்குகள் மாத்திரமே கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர வைக்க வழி வகுத்திருந்தது.
இலங்கை தமிழ் மக்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவிற்கே வாக்குகளை வழங்குவர் என்பது ஆரம்பத்திலேயே கணிக்கப்பட்டது.
எனினும், எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இலங்கை வாழ் தமிழ் பேசும் சமூகம் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவை வழங்கியிருந்தது.
தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்ட அன்றைய தினமே தமிழர்கள் மீது சில தரப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். தமிழர்கள் நிச்சயமாக சஜித் பிரேமதாஸவிற்கே வாக்களிப்பார்கள் என்பதை அறிந்த சில தரப்பினர், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரம் - ருவன்வெலி சாய விஹாரை வளாகத்தில் கடந்த 18ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
அன்றைய தினம் ஆற்றிய உரையில் கூட தமிழர்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
''இந்த வெற்றிக்கான பிரதான காரணம், இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த மக்கள் என்பதை நாம் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தோம். சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என நான் அறிந்திருந்த போதிலும், நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தேன். இந்த வெற்றியில் பங்குதாரராகுமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். எனினும், அதற்கான பதில் எதிர்பார்த்த அளவு கூட கிடைக்கவில்லை. எனினும், நான் உங்களின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து, உண்மையான இலங்கையர்கள் என்ற விதத்தில் என்னுடன் இணைந்து பயணிக்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்," என தனது முதல் உரையில் கூறியிருந்தார்
ஜனாதிபதியின் இந்த உரையானது தமிழர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை மாத்திரமன்றி அச்சத்தையும் தோற்றுவித்தது.
இந்த நிலையில், இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிப்புக்கள் இடம்பெற்று வருவதாக குற்றம்சாட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளில் உள்ள தமிழ் மொழி அழிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலத்தில் பெரும்பான்மையின் தீண்ட தகாத முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர கூறியுள்ளார்.
வீதிகளிலுள்ள தமிழ் பெயர்கள் அழிக்கப்பட்டுள்ளதையும் அவர் தனது பதில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பதிலுக்கான நாடு காத்திருக்கின்றது என மங்கள சமரவீர கூறியுள்ளார்.
அதேபோன்று சில பகுதிகளில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, இலங்கை அரச இலட்சிணையுடன் சிங்கள மொழியில் மாத்திரம் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்களும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.