சிங்கள அரசாங்கம் மாறவில்லை - காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்
20 Nov,2019
சிங்களஅரசு தான் மாறியிருக்கிறது சிங்கள அரசாங்கம் மாறவில்லை. எனவே தெற்கிலிருந்து நீதியான தீர்வு வரும் என்று நம்ப முடியாத நிலையில் சர்வதேசத்திடமிருந்தே தீர்வினை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம்
என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1005 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்,
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
ஜனநாயக ரீதியிலே புதிய ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாமும் ஜனநாயக முறையிலேயே சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமான தீர்வுக்காக தெருவில் இருந்து தொடர்ந்து போராடி வருகிறோம்.
இன்றையதினம் நாம் போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சிவில் உடையில் வருகைதந்த இருவர் தம்மை பொலிசார் என அறிமுகப்படுத்தியதுடன் எமது போராட்டம் தொடர்பாகவும் விசாரித்திருந்தனர்.
குறித்த போராட்டத்தை தொடர்ந்து நடத்த போகின்றீர்களா அல்லது முடிப்பீர்களா என எம்மிடம் கேட்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் ஆதரவினை வழங்கிய நிலையில் அவர் எமக்கு எந்தவிதமான தீர்வினையும் வழங்கவில்லை. தற்போது வந்திருக்கும் ஜனாதிபதியும் எமது பிரச்சனை தொடர்பாக என்ன சொல்ல போகின்றார் என எமக்கு தெரியவில்லை. எமக்கு யார், எப்போது தீர்வினை வழங்குகிறார்களோ அந்த நேரமே குறித்த போராட்டத்தை நிறுத்துவோம். என அவர்களிடம் கூறியிருந்தோம். என்று தெரிவித்தனர்.