இலங்கை தேர்தல்: 80 சதவீதத்தை தாண்டிய வாக்கு பதிவும் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வெற்றியும்
16 Nov,2019
இலங்கையில் இதுவரை 7 நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
இதில் 80 சதவீதத்தைத் தாண்டி வாக்குப் பதிவுகள் பதிவாகிய இரண்டு சந்தர்ப்பங்கள் இதற்கு முன்னர் காணப்பட்ட நிலையில், இந்த முறை 80 சதவீத வாக்குப் பதிவு பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, 1982ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதி வரை 8 தடவைகள் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றுள்ளன.
இந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர்கள் வாக்களித்த சதவீதம் தொடர்பில் அவதானம் செலுத்தினோம்.
ஐக்கிய தேசியக் கட்சி
1982ஆம் ஆண்டு 81.06 சதவீத வாக்குப் பதிவு பதிவாகிய நிலையில், அந்த காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பீடம் ஏறியது.
இதன்படி, 1982ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் இரண்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாஸ 55.32 சதவீத வாக்குகளைப் பெற்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ரணசிங்க பிரேமதாஸ 1993ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், இடைகால ஜனாதிபதியாக டி.பீ.விஜேதுங்க தேர்தல் ஒன்று நடத்தப்படாது நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதித் தேர்தல் 1994ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முதல் தடவையாகத் தோல்வியைச் சந்தித்தது
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தலைமையிலான மக்கள் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்றாவது ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் 70.47 சதவீத வாக்குப் பதிவு பதிவாகியிருந்தது.
அதன் பின்னர் இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் 1999ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்த தேர்தலில் 73.31 சதவீத வாக்குப் பதிவு பதிவாகின.
இதன்படி, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் இரண்டாவது தடவையாகவும் தெரிவாகினார்.
2005ஆம் ஆண்டு நடைபெற்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் 73.73 சதவீத வாக்குப் பதிவாகியிருந்தது.
இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார்.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காகத் தேர்தல் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது.
30 வருட உள்நாட்டு யுத்தம் நிறைவு பெற்று பின்னணியில் இந்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்டிருந்தார்.
இதன்படி. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக 74.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
அவ்வாறான பின்னணியில், மீண்டும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவானார்.
அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக களமிறக்கியது.
2019 தேர்தல்
இந்த தேர்தலில் நாடு முழுவதும் 81.52 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார்.
இந்த நிலையில், இந்த முறை ஜனாதிபதித் தேர்தல் இன்று (16) மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் 80 சதவீதமான வாக்குகள் பதிவாகியதாகத் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக இன்று மாலை அறிவித்தது.
1982 மற்றும் 2015ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 80 வீதத்தைத் தாண்டிய வாக்குப் பதிவுகள் பதிவான அனைத்து சந்தர்ப்பங்களிலும்; ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அந்த கட்சி தலைமையிலான கூட்டணியே வெற்றியைத் தனதாக்கிக் கொண்டுள்ளது.
1988ஆம் ஆண்டில் ஆகக் குறைவான வாக்குப் பதிவாக 55.32 சதவீத வாக்குப் பதிவு பதிவாகிய போதிலும், அந்த தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெற்றது.
எனினும், 1994ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் 70 சதவீதம் முதல் 74.5 சதவீதம் வரையான வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற தருணங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அந்த கட்சித் தலைமையிலான கூட்டணிகளே வெற்றியைப் பெற்றுக் கொண்டன.
இதன்படி, இந்த முறை 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னணியில், 80 சதவீதத்தைத் தாண்டிய வாக்குப் பதிவுகள் இடம்பெற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அந்த கட்சித் தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றிமையைச் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும்.