இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தல் – 8 சுவாரசிய தகவல்கள்
16 Nov,2019
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இந்த முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 1 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இந்த முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
இந்தத் தேர்தல் தொடர்பான எட்டு சுவாரசிய தகவல்கள் இதோ.
தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி அல்லது பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் போட்டியிடாத முதல் ஜனாதிபதி தேர்தல் இதுதான். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய மூவருமே இதில் களமிறங்கவில்லை.
இலங்கை வரலாற்றில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக இது பதிவாகியுள்ளது. மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிகளவிலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த ஜனாதிபதி தேர்தலாகவும் இது உள்ளது. மொத்தம் 41 வேட்பு மனுக்கள் இந்தத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்டன.
அதிக எண்ணிகையில் வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களிலேயே மிகவும் நீளமான வாக்குச்சீட்டை கொண்ட ஜனாதிபதி தேர்தல் இதுதான்.
இலங்கை வரலாற்றில் அதிக செலவீனத்தை கொண்ட ஜனாதிபதித் தேர்தல் இதுவாகும். இலங்கை ரூபாய் மதிப்பில் 750 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலவிடப்படவுள்ளது.
தேர்தல் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் முதல் முறையாக கார்ட் போர்ட் அட்டைகளால் ஆன வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகிறது.
பிரதான அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடாத முதலாவது ஜனாதிபதி தேர்தல் இதுவாகும். பதவி விலகும் ஜனாதிபதி சிறிசேன இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.
சுயாதீனமாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்பட்ட நிலையில், ஆணைக்குழுவின் கீழ் நடத்தப்படும் முதலாவது ஜனாதிபதி தேர்தல் இது. இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
இப்போது தேர்வு செய்யப்படும் ஜனாதிபதி, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.