ஜனாதிபதி தேர்தல் நெருங்கியபோது, தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டுமென பேசப்பட்டுவந்தது. தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த சுயாதீனக் குழு ஒன்றும் இது தொடர்பாக பல கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது.
ஆனால், தமிழ் கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு முதன்மை வாக்குகளையும், இரண்டாவது வாக்குகளை விரும்பிய வேட்பாளருக்கும் அளிக்கச் செய்ய வேண்டுமென்பதே இந்தப் பேச்சு வார்த்தைகளின் மையமாக இருந்தது. இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதற்குப் பிறகு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர் யூனியன் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் கட்சிகளுடன் பேசினர். இடையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சு வார்த்தைகளில் இருந்து வெளியேறியது. இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.
இந்த 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இரு பிரதான வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்காத நிலையில், வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இதிலிருந்து விலகியது.
யாருக்கும் வாக்களிக்கும்படி தான் கோர முடியாது என்றும் மக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் மக்கள், தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என அறிவித்துவிட்டது.
இதற்குப் பிறகு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்தது. கூட்டமைப்பிற்குள் உள்ள டெலோ சஜித் பிரேமதாஸவை ஆதரித்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அக்கட்சியின் யாழ் மாவட்டப் பிரிவு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
தமிழர் ஒருவர் கனவில் கூட ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர முடியாது என எம்.கே.சிவாஜிலிங்கம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இப்படியாக வடக்கில் செயல்படும் தமிழ்க் கட்சிகள் பல்வேறு திசைகளில் பிரிந்து நின்றாலும், கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை சஜித் பெறக்கூடும். இந்தத் தேர்தலில் இருந்து தமிழ் மக்கள் என்ன எதிர்பார்க்க முடியும்?
"அடக்குமுறை இல்லாத ஆட்சி நீடிக்கும் என்பதே முதல் எதிர்பார்ப்பு. தவிர, புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு ஆகியவையும் சொல்லப்பட்டிருக்கின்றன" என பிபிசியிடம் கூறினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன்.
சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவெடுத்தது ஏன் எனக் கேட்டபோது, "இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் பேசினோம். அவர்கள் அதற்கு முன்பு வகித்த பதவிகளில் எப்படி செயல்பட்டார்கள் என்பதைப் பார்த்தோம். அவர்கள் தேர்தல் அறிக்கைகளில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை விவாதித்தோம். அதற்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்தோம்" என்றார் சுமந்திரன்.
ஆனால், இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு வளர்ச்சியைக் கிடைக்கச் செய்யும் என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் ராமநாதன்.
"கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறையச் செய்திருக்கிறார். ஆனால், பல காரியங்களைச் செய்யவிடாமல் பிரதமர் ரனில் விக்ரமசிங்க தடுத்துவிட்டார். தவிர, போர்க் காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு, ஏசி அறையில் அமர்ந்து நிர்வாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றம்சாட்ட முடியாது" என்கிறார் அங்கஜன்.
ஜனாதிபதி தேர்தல்களைப் பொறுத்தவரை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதைவிட யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் வாய்ப்புதான் தமிழ் மக்களுக்கு இருக்கிறது என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகரான நிலாந்தன்.
"இந்தத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு நான்கு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கோட்டாபய ராஜபக்ஷ, இரண்டாவது சஜித் பிரேமதாஸ, மூன்றாவது தேர்தலைப் புறக்கணிப்பது, நான்காவது பொது வேட்பாளரை நிறுத்துவது. ஆனால், பொது வேட்பாளரை நிறுத்துவதில் வெற்றிகிடைக்கவில்லை. இந்த நிலையில், யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களிக்கும் நிலைக்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்கிறார் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் விமர்சகரான நிலாந்தன்.
இலங்கையில் உள்ள சுமார் 17 லட்சம் தமிழ் வாக்காளர்களில் 8.38 லட்சம் வாக்காளர்கள் வடக்கில் வசிக்கிறார்கள். கடந்த முறை போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணத்தில் சுமார் 21 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். இந்த முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நிச்சயம் அதைவிட கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்கிறார் நிலாந்தன்.
தென்னிலங்கை மக்களைப் பொறுத்தவரை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெற்றிகரமான ஜனாதிபதியாக மஹிந்த பார்க்கப்படுகிறார். வடக்கில் வசிக்கும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை 2009ஆம் ஆண்டின் யுத்த முடிவை மனதில் வைத்து தேர்தல் முடிவுகளை எடுக்கிறார்கள்.
"இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. யுத்தம், அதன் முடிவு ஆகிவற்றை வைத்து தேர்தலை விவாதித்தால், தொடர்ந்து ராஜபக்ஷ தரப்பு முன்னிலையிலேயே இருக்கும். ஆகவே தமிழ்த் தரப்பு இந்த பாணியிலிருந்து விலகி, தனது பேரம் பேசும் திறனை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்" என்கிறார் நிலாந்தன்.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பொதுமக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது கட்டுப்பாடுகள் தளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
இனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற பெரிய எதிர்பார்ப்புகளின்றி, அச்சுறுத்தல் இல்லாத, அமைதியான அன்றாட வாழ்க்கையை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறார்கள் வடமாகாண மக்கள்.