கோத்தாபய வெற்றி பெற்றால் இனிவரும் காலங்களில் தேர்தலே இடம்பெறாது ; சுமந்திரன்
13 Nov,2019
கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால் இனிவரும் காலங்களில் தேர்தலே இடம் பெறாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று (12) சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதன் நோக்கம் பற்றி மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் ராஜபக்ச குடும்பத்தில் மிகவும் மோசமான ஒருவரே கோத்தாபய ராஜபக்ஷ எனவும் இம்முறை தேர்தலில் அவரை நிராகரிக்காவிட்டால் நாட்டில் பாரிய பிளவுகளை ஏற்படுத்துவார் எனவும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் அன்னம் சின்னத்துக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் கோத்தாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப் பகிர்வு பற்றி எதுவும் கூறப்படவில்லை எனவும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்க்கின்ற போது அதிகாரப் பகிர்வு பற்றி ஒவ்வொன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை ஆதரிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவை சேனாதிராசா, க. துரைரெட்ணசிங்கம், திருகோணமலை மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். குகதாசன், செயலாளர் க . செல்வராஜா திருகோணமலை நகராட்சி மன்ற தலைவர் என். ராசநாயகம், உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் டொக்டர் ஈ. ஜி. ஞானகுணாளன் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .