தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சிங்களவர்களுக்கு உதவிய சம்பந்தன்!
12 Nov,2019
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சிங்களவர்களுக்கு உதவிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயன் சம்பந்தனின் வாய்ச்சவடாலுக்கு ஏமாறாமல் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச ஒற்றையாட்சிக்குள் சமஷ்டியை மறைந்து வைத்திருப்பதாக தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் நினைவேந்தல் நிகழ்வு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்று முன்தினம் (10) அனுஷ்டிக்கப்பட்டது.
995 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து அவர்கள் கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.