கோத்தாவும் இல்லை, வெள்ளை வேனும் இல்லை ; மன்னாரில் பிரதமர்
02 Nov,2019
மக்கள் அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கு எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாங்குங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் தாரபுரம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை(2) மாலை 5 மணியவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரச்சார கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது அமைச்சர்களான றிஸாட் பதியுதீன்,ராஜித சேனராத்தின, ரவி கருநாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மன்னார் மாவட்டம் மிக சிறப்பாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் வாக்களித்தீர்கள்.
அந்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் அதிகரித்துள்ளீர்களா? அச்சமில்லாமல் வீதியில் செல்லுகின்றீர்களா? வெள்ளை வேன் வருகின்றதா? இல்லை.கோத்தா இல்லை வெள்ளை வேனும் இல்லை.
எனவே எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள். கோத்தா இல்லை வெள்ளை வேனும் இல்லை.கோட்ட இல்லாததால் வெள்ளை வேன் கிடையாது.
அமைச்சர் றிஸாட் பதியுதீன் அதிகமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.மன்னார் நகரம் அபிவிருத்தி அடைந்துள்ளது. பாடசாலைகள்,வீதிகள்,கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.நாங்கள் ஆரம்பித்த அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.மன்னாரில் இருந்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் வீதியை அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம்.
காற்றாலைகளை மன்னாரில் அமைக்க இருக்கின்றோம் .சூரிய மின் சக்தி வசதிகளை ஏற்படுத்த இருக்கின்றோம்.தலைமன்னார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம். மன்னார்,வவுனியா,திருகோணமலைக்கு செல்லும் பாதைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மேலும் புதிய அபிவிருத்தி திட்டங்களையும் நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.மீன் பிடி விவசாயம் ஊடாக வருமானத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நவீனப்படுத்தும் வேளைத்திட்டத்தினூடாக தனியார் துறைக்கு விசேட வாய்ப்புக்களை வழங்க இருக்கின்றோம்.நாங்கள் அமைச்சர்களுடன் பேசி இருக்கின்றோம் இப்பகுதியில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதற்கு.
நாங்கள் பணத்தை செலவழிப்பது வாக்குகளை பெற்றுக்கொள்ளுவதற்கு அல்ல.பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கே.எனவே பணத்திற்காக ஏமாற வேண்டாம்.அமைச்சர் றிஸாட் பதியூதினுக்கு மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்து ஜனாதிபதியாக்குங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்