கோட்டாவின் பட்டிய’லால் அதிர்ந்தது நீதிமன்று!
02 Nov,2019
2012நவம்பரில்தான் அந்த சம்பவம் நடந்தது. வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இராணுவ அதிகாரிகள் இருவர் நுழைந்தனர். அவர்களின் கைகளில் ஒரு பட்டியல் இருந்தது.
அந்தப் பட்டியலில் சில பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அவை சிறையில் இருந்த கைதிகளின் பெயர்கள். அந்த இராணுவ அதிகாரிகள் இருவரும் அப்பட்டியலை ‘கோட்டாவின் பட்டியல்” என்று கூறிக்கொண்டார்கள்.
அப்போது வெலிக்கடை சிறையில் பணியாற்றிய உதவி அத்தியட்சகர் பி.டபிள்யூ குடாபண்டார நிரந்தர நீதிமன்றத்தில் வெலிக்கடை படுகொலை சம்பவம் தொடர்பாக சாட்சிமளித்த போது கூறியதுதான் மேலே தரப்பட்டுள்ளது.
குடாபண்டாரவின் மேற்படி சாட்சியம் நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தில் அன்று பெருமளவில் நிறைந்திருந்த மக்கள் கூட்டத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
2012நவம்பர் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைக்குள் அதிரடியாகப் புகுந்தது விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அடங்கிய குழு, அவர்களது கைகளில் தானியக்க துப்பாக்கிகள் மின்னின.
சிறைக்குள் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முடக்குமாறு தமக்கு மேலிடத்து உத்தரவு கிடைத்துள்ளதாக அவர்கள் கூறினர்.
ஆனால் சிறையில் இருந்த 27கைதிகளின் உயிர்களை பறிக்கவே அவர்கள் அனுப்பப்பட்டிருந்தார்கள் என்று பின்னர்தான் தெரியவந்தது.
7வருடங்களின் பின்னர் அதாவது இவ்வருடம் ஜூலை நான்காம் திகதி மேற்படி சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களான பொலிஸ் போதைவஸ்து ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்டெக்டர் நியோமல் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகர் எமில் ரஞ்சன் லமாஹேவகே மற்றும் சிறை அதிகாரி இந்திக சம்பத் ஆகியோர் மீது மேற்படி படுகொலை சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி மூவர் மீதும் 33குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.
வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்படி படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் தான் கட்டிடத்துக்குள் ஒளிந்திருந்ததாக குடாபண்டார தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
ஆனால் ஒளிந்திருந்த கட்டிடத்துக்குள் இருந்து வெளியே வந்த போது இரண்டு அதிகாரிகள் தன்னை சூழ்ந்து கொண்டு ‘உக்குவர், சியாம்’ ஆகிய இரண்டு கைதிகளும் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டதாக தனது சாட்சியத்தில் குடாபண்டார கூறியுள்ளார்.
‘கோட்டாவின் பட்டியல்’ என்று கூறிக்கொண்ட பெயர்ப்பட்டியலை அவர்களது கையில் வைத்திருந்தவாறே அவர்கள் இவ்வாறு கேட்டதாகவும், அவர்கள் கேட்ட இரு கைதிகளும் தற்போது வெலிக்கடையில் இல்லை என்று தான் அவர்களுக்கு பதில் கூறியதாகவும் குடாபண்டார ஞாபகத்துடன் குறிப்பிடுகிறார்.
அந்த நேரம் சிறையில் இடம்பெற்ற கோரமான காட்சிகளை குடாபண்டார தனது சாட்சியத்தின் போது வெளிப்படுத்தினார்.
தங்களைக் கொல்லவேண்டாம் என்று சிறைக்கைதிகள் கூச்சலிட்டது தனக்கு கேட்டதாகவும், தங்களை காப்பாற்றுமாறு ஒரு சில கைதிகள் தனது பெயரை கூறி கூக்குரலிட்ட போதும் எதுவுமே சொல்லமுடியாத நிலையில் தான் குழம்பியதாக குடாபண்டார தனது சாட்சியத்தில் குறிப்பிடுகிறார்.
அத்துடன் சிந்தாமணி, அல்லது துஷார சந்தன என்ற கலு துஷார எவ்வாறு இராணுவத்தினரால் இழுத்து கொல்லப்பட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
தன்னுடன் ஒரே கட்டிடத்தில் ஒளிந்திருந்த கலு துஷார உதவி கேட்டு கதறினார்.
எனினும் ஓரிரு நிமிடங்களில் மூன்று வேட்டுச் சத்தங்களால் கலு துஷாரவின் குரல் மௌனித்தது என்று குடாபண்டார மேலும் கூறிகிறார்.
பதற்றத்துக்கிடையே தான் கட்டிடத்தில் இழுத்து வெளியே வந்தபோது சிவில் உடையில் இருந்த மூவர் எந்தச் சலனமும் இன்றி இருந்ததை சிறைக்குள் தான் கண்டதாகவும் அவர்களுடன் மஞ்சள் டீ சேர்ட் அணிந்த ஒருவர் இராணுவ அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்ததை தான் கண்ணுற்றுதாகவும் குடாபண்டார தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிட்டார்.
அதனையடுத்து தான் தனது சக அதிகாரியொருவரிடம் கேட்டபோது அவர்தான் நியோமல் ரங்கஜீவ என்று தனது சக அதிகாரி கூறியதாகவும் குடாபண்டார தனது சாட்சியததில் கூறியிருந்தார்.
அதேநேரம் சிறைக்கட்டிடம் ஒட்சிசன் மறுபுறத்தில் ரங்கஜீவவே டோர்ச்லைட்டை அடித்து அரசப்புளிகே, அல்லது பொன்ன, கபில, கங்காணம்லாகே மலிந்த நிலேந்திர பெல்பொல அல்லது மாவன் என்போரை எழுப்பிக் கொண்டிருந்தை தான் கண்டதாகவும், கோரச் சம்பவங்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் அவர்கள் இருவரினதும் சடலங்களையே தான் கண்டதாகவும் அவர் தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகிறார்.
அவர்கள் இருவரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருந்தார்கள் என்றும் அவர் கூறுகிறார். தான் இவ்வாறு நீதிமன்றத்தில் சாட்சியளித்த பின்னர் தனக்கு ,தொலைபேசி அழைப்புகள் மூலம் மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் குடாபண்டார நீதிமன்றத்தில் கூறினார்.
மகசீன் சிறைச்சாலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சிறைக்கைதிகள் பலரின் அருகே டி 56 ரக துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்ததை தான் கண்டதாகவும் குடாபண்டார நீதிமன்றத்தில் கூறினார்