விடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சை கருத்து: விஜயகாலவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை?
01 Nov,2019
தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த விசாரணையின்போது. சி.ஐ.டி. அதிகாரிகள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்ட நீதவான், வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் முடிவுற்றுள்ள நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2018 ஜூலை 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், “நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் அன்றே 500,000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.