காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் பெற்றுத்தர ஜனாதிபதி தேவையில்லை – சிறிநேசன்
30 Oct,2019
காணாமல்போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி ஓருவரை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏமாளிகளாக தமிழ் மக்கள் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மேலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படும் தமிழ் கட்சிகளினால் அவரது காலத்தில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை மீட்டுத்தர முடியுமா என்றும் இதன்போது அவர் கேள்வியெழுப்பினார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் குறித்து என்ன இருக்கின்றது? அவரிடம் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான தீர்வாக இருப்பது மரணச்சான்றிதழ் வழங்குவது மட்டுமேயாகும்.
மரணச்சான்றிதழ் இல்லாமல்தான் ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடிவருகின்றனரா?
மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டால் காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் முடிந்துவிடும் என்று கூறுபவர்களுக்கு சார்பாக வாக்கு சேகரிப்பவர்களிடம் கேட்டுக்கொள்ளும் விடயம், பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று நீங்கள் கூறினால் காணாமலாக்கப்பட்ட உறவுகள் விடுத்திருக்கும் முக்கியமான கோரிக்கையான அவர்களது உறவுகளை தேர்தலுக்கு முன்பாக ஆலயங்கள், தேவாலயங்களுக்கு முன்பாக கண்டுபிடித்து ஒப்படையுங்கள்.
அதன் பின்னர் உங்களுக்கு வாக்களிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் மக்கள் பரிசீலனை செய்வார்கள். மாறாக மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக ஒரு ஜனாதிபதி வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற அளவில் தமிழ் மக்கள் ஏமாளிகள் இல்லை” என மேலும் தெரிவித்தார்.