கொழும்பு உணவகத்தில் தமிழ் பேசக்கூடாது என அறிவிப்பு – காரணம் என்ன?
30 Oct,2019
தமிழ் மொழியில் உரையாட கொழும்பிலுள்ள உணவகமொன்று அதன் ஊழியர்களுக்கு தடை விதித்துள்ள சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியில் உள்ள உணவகமொன்றில் தமிழ் மொழியில் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.
”அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக ஆங்கிலம் மற்றும் சிங்களம் மாத்திரமே பேச வேண்டும். தமிழ் மொழியில் பேசக்கூடாது”என அறிவித்தல் பலகையொன்றின் ஊடாக உணவகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, இலங்கை வாழ் தமிழர்கள் பல்வேறு எதிர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த உணவகம் இந்த அறிவிப்பு விடுத்தமைக்கான காரணத்தை தெளிவூட்டியுள்ளது.
இந்த அறிவித்தலின் ஊடாக தவறாக புரிதலை ஏற்படுத்தியுள்ளமைக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக்கு கேட்பதாக அந்த உணவகத்தின் நிர்வாகம் கூறியுள்ளது.
ஊழியர்கள் தமிழ் மொழியில் பேசுகின்றமையினால், வாடிக்கையாளர்களை கேலி செய்வதை போன்று உள்ளதாக, வாடிக்கையாளர்களினால் புகார் அளிக்கப்பட்டதாக அந்த உணவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு – மனோ கணேசன்
கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றில் தமிழ் மொழி பேசக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மனோ கணேசன், அரச கரும மொழிகள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைச்சர் மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கொழும்பில் உணவகமொன்றில் தமிழ் மொழி பேசக்கூடாது என செய்யப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமையை மீறியோர் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.