விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி – விசாரணை அறிக்கைகள் கையளிப்பு!
28 Oct,2019
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
மலேசிய சட்டமா அதிபரிடம் இந்த விசாரணை அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதானி அய்யூப் கான் தெரிவித்துள்ளார்.
இதற்கைமைய, நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை கருத்திற் கொண்டு, அவர்களை தொடர்ந்தும் தடுத்து வைப்பதா, தண்டனைக்கு உட்படுத்துவதா அல்லது விடுவிப்பதா என்பது குறித்து சட்டமா அதிபர் தீர்மானிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக அவர்களுக்கு இரண்டு மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களும் மலேசியாவின் குடியுரிமையைப் பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த சந்தேக நபர்களின் செயற்பாடுகள், மலேசிய பொலிஸாரினால் அவதானிக்கப்பட்டு வந்துள்ள நிலையிலேயே, அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.