தமிழ் இளைஞன் சிங்கள பிரதேசத்தில் எலும்புக்கூடாக மீட்பு!
21 Oct,2019
நக்கிள்ஸ், பிடவல, லிட்டில் வேர்ல்ட்டின் பள்ளத்தாக்கில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டநிலையில் அது , கடந்த வருடம் காணாமல் போன கண்டியை சேர்ந்த தமிழ் இளைஞனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அலவத்தகொடவை சேர்ந்த செல்வராஜ் செல்வகுமார் என்ற இளைஞனின் எலும்புக்கூடே இதுவென பல்லேகம பொலிசார் தெரிவித்தனர்.எலும்பு எச்சங்களுடன் கையடக்கத் தொலைபேசி, சாரதி அனுமதிப்பத்திரம், காலணி, கிழிந்த ஆடையின் பாகங்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குன்றின் விளிம்பிலிருந்து கீழே குதித்து, அந்த இளைஞன் உயிரை மாய்த்திருக்கலாமென நம்பப்படுகிறது.
கீழே விழுந்து உயிரை விடுவதற்கு முன்னதாக, கையடக்கத் தொலைபேசியில் அவர் பல புகைப்படங்களை எடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.லிட்டில் வேள்ட் பள்ளத்தாக்கை பார்வையிட வந்த பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் கைப்பை தவறி கீழே விழுந்திருந்தது. அதிகாரிகளிடம் அது குறித்து முறையிட்டதையடுத்து, அந்த பகுதியில் இறங்கி தேடுதல் நடத்தியபோது, அந்த பகுதியில் ஒரு மனித மண்டை ஓடு காணப்பட்டது. இது குறித்து லக்கல பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பொலிசார் விசாரணைகளைத் தொடங்கினர்.
இதன்போதே தடயப்பொருட்கள் மீட்கப்பட்டு, உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்பட்டார்.சம்பவ இடத்தை நவுல நீதிவான், மருத்துவ அதிகாரி பார்வையிட்டு, எலும்புக்கூடுகளை மேலதிக விசாரணைகளுக்காக தம்புல்ல ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த இளைஞனை காணவில்லையென குறிப்பிட்டு, 2018 ஒக்டோபர் 23ம் திகதி அலவத்துகொட பொலிஸ் நிலையத்தில், தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் அவர் பற்றிய எந்த தடயமும் கிடைக்காமலிருந்தது.
வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து மகன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன்பின்னர் பொலிசில் புகார் அளித்ததாகவும் இறந்தவரின் தாய் தெரிவித்துள்ளார். மரணம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.