மக்களின் நலன்களை பாதிக்கும் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது –
19 Oct,2019
மக்களது நலன்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி வரவேற்கத்தக்கதொன்றுதான். ஆனாலும் பலாலி பிரதேசமும் அதன் பெருமையும் அடையாளங்களும் இல்லாது போய்விடக் கூடாது என்பதுதான் எமது கோரிக்கையாக உள்ளது.
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தால் இராணுவத்தினருக்கென்று மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டன. அதன்பின்னர் அபிவிருத்திக்கென அபகரிக்கப்பட்டது. இன்று பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் விமானநிலையமாக உருமாறியுள்ளது.
இதனால் பலாலி என்ற தமிழ் மக்களின் பெருமை பொருந்திய பிரதேசம் அதன் அடையாளங்களை இழந்துவருகின்றது. நாளடைவில் பலாலி என்றொரு பிரதேசம் இருந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாது போய்விடக் கூடாது என்பதே எமது மக்களின் பெருவிருப்பாக உள்ளது.
எமது மக்களின் விருப்பங்களுக்கே நாம் செவிசாய்த்து வருகின்றோம்.
மக்களது நலன்களை சுரண்டாத வகையிலேயே எந்தவொரு அபிவிருத்தியும் இருக்கவேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு காணப்படவில்லை. மக்களது நலன்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் நாம் துணைபோகமாட்டோம்.
கடந்த கால ஆட்சி அதிகாரங்களில் நாம் அரசாங்கத்தில் இருந்தபோது அதிகளவான பணிகளையும் நலத்திட்டங்களையும் நாம் மக்களுக்காக செய்துகாட்டியிருக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.