தமிழ் குடும்பத்தை நாடுகடத்தும் விவகாரம் – ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்தது அவுஸ்ரேலியா
04 Oct,2019
கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நடேசலிங்கம் – பிரியா தம்பதியினரை அவுஸ்ரேலியா விடுதலை செய்யவேண்டும் என ஐ.நா. வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கோரிக்கையை அவுஸ்ரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தமிழ் அகதி குடும்பத்தினர் நாடு கடத்தலுக்கெதிராக தொடர்ந்தும் போராடிவரும் நிலையில் அவர்களை முகாமிலிருந்து விடுவித்து சமூகத்தில் வாழ அனுமதிக்கும் படியும் அங்கிருந்துகொண்டு அவர்கள் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு ஐ.நா. சார்பில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவுஸ்ரேலிய உட்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஐ.நா.வின் கோரிக்கையை உட்துறை அறிந்திருப்பதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அவர்கள் கிறிஸ்மஸ் தீவிலேயே தொடர்ந்து வைத்திருக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012இல் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013இல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்ரேலியாவில் சந்தித்த பின்னர் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக் கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்ரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.
அவுஸ்ரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018இல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
அண்மையில், அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.