சரணடைந்த விடுதலைப் புலிகளின் தகவலைக்கோரி இராணுவத்திற்கு எதிராக மேன்முறையீடு!
04 Oct,2019
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பாக இராணுவத்தால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு எதிராக, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்பதால், இது தொடர்பாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் இன்று (வியாழக்கிழமை) மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான தகவல்கள் இராணுவத்திடம் கோரி தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் படி, தமிழ் ஊடகம் (தமிழ் மிறர்) ஊடகவியலாளரால், கோரப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்து பிரிகேடியர் ஏ.எம்.எஸ்.பீ.அத்தபத்து என்பவரினால் அனுப்பி வைக்கப்பட்ட தகவலில் இறுதி யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தில் இது தொடர்பானத் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியுமென பதிலளித்திருந்த நிலையில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.